சிங்கப்பூர் வெள்ளிக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு அண்மைய மாதங்களாகவே குறைந்து வருகிறது. வியாழக்கிழமை (டிசம்பர் 15) ஒரு வெள்ளிக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 61.26ஆக இருந்தது.
ஒரு மாதத்திற்கு முன் ஒரு வெள்ளிக்கு 59.17 ரூபாய் என்ற அளவில் வர்த்தகம் நடந்தது. ஒரு வெள்ளிக்கு 60 ரூபாய் என்ற அளவை இதுவரையில் இந்திய நாணயம் எட்டியது இல்லை என்று நம்பப்படுகிறது.
இந்திய ரூபாயின் மதிப்பு இந்த ஆண்டு முழுவதுமே குறைந்து வருகிறது. அதற்கு பல்வேறு காரணங்கள் கூறப்படுகின்றன.
அமெரிக்காவின் மத்திய வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தி வருவது, ரஷ்யா-உக்ரேன் போர் காரணமாக உலகளவில் பணவீக்கம் கூடியிருப்பது, உள்நாட்டுப் பொருளியல் நெருக்கடிகள் போன்ற பல அம்சங்கள் காரணமாக ரூபாயின் மதிப்பு சரிந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
சிங்கப்பூருக்கு வரும் இந்திய பயணிகள் ரூபாயைக் கொடுத்து வெள்ளியாக மாற்றும்போது முன்பைவிட அவர்களுக்கு குறைவான சிங்கப்பூர் நாணயமே கிடைக்கின்றன.
அதேவேளையில், வெள்ளியின் மதிப்பு கூடி இருப்பதால், இந்தியாவுக்குச் செல்பவர்களில் சிலர் மகிழ்ச்சிகூட அடைகிறார்கள்.
இதனிடையே, சிங்கப்பூர் வந்திருந்த இந்தியாவைச் சேர்ந்த முகம்மது இசாக், 42, என்பவர் ரூ.100,000க்கு $1,630தான் கிடைக்கும் என்பதை அறிந்து திடுக்கிட்டார்.
அதேவேளையில், இந்த ஆண்டு முழுவதுமே தனக்கு கொஞ்சம் சிரமமான ஆண்டாகத்தான் இருந்து வந்தது என்று நாணய வர்த்தகரான செல்வம் நாகராஜன், 52, கூறினார்.
அளவுக்கு அதிகமாக இந்திய ரூபாய் வைத்திருந்தால் மதிப்பு மேலும் இறங்கும் பட்சத்தில் தனக்கு இழப்புகூட ஏற்பட்டுவிடலாம் என்ற அவர், என்றாலும் வியாபாரம் அதிகரித்து இருக்கிறது என்றார்.
பஷிர் அகம்மது என்ற வேறொரு நாணய வர்த்தகர், இந்திய ரூபாய்க்கான தேவை அதிகமாக இருக்கிறது என்று குறிப்பிட்டார். ஏற்கெனவே ரூ.20,000 வாங்கியவர்கள் இப்போது ரூ.50,000 வாங்குகிறார்கள் என்றாரவர்.
விடுமுறையில் இந்தியா செல்லும் குடும்பத்தினர், சராசரியாக $2,000 கொடுத்து இந்திய ரூபாய் மாற்றுவார்கள். இந்தத் தொகை இப்போது இரண்டு மடங்காகி உள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சில்லறை வர்த்தக உதவியாளரான ஆனந்தலதா நாராயணன், 58, இந்திய ரூபாய் மதிப்பு குறைவதால் இந்தியாவில் பொருள், சேவைகளுக்கான செலவு அதிகரித்துவிடக்கூடும் என்று அஞ்சினார். ஆகையால், ரூபாய் மதிப்பு குறைவதால் லாபமா, இழப்பா என்பது இந்தியாவுக்குப் போய் வந்தால்தான் தெரியும் என்றாரவர்.
இவ்வேளையில், கட்டுமானத் துறை ஊழியரான சின்னையா முருகேஷ், 34, தன் குடும்பத்திற்கு இப்போது அதிக இந்திய ரூபாய் அனுப்ப முடிவதாகக் கூறி மகிழ்ச்சி தெரிவித்தார்.
இவர், தஞ்சாவூர் மாவட்டத்தில் வீடு ஒன்றைக் கட்டி வருகிறார். தன் சம்பளத்தில் பெரும் பகுதியைக் குடும்பத்திற்கு இவர் அனுப்பி வைக்கிறார்.

