கோவில் கிணறு இடிந்து விழுந்து 35 பேர் உயிரிழப்பு

கோவில் கிணறு இடிந்து விழுந்து 35 பேர் உயிரிழப்பு

fallback-0
கிணற்றுக்குள் தவறி விழுந்தவர்களை மீட்கும் பணி. படம்: இந்திய ஊடகம்

31 Mar 2023 - 10:55 am

1 mins read

ராம நவமி கொண்டாட்டத்தின்மீது கோவில் கிணற்றின்மீது மூடப்பட்டிருந்த கற்பலகைகள் திடீரென உள்வாங்க, கிணற்றுக்குள் தவறி விழுந்து 35 பேர் உயிரிழந்துவிட்டனர்.

அவர்களில் பலரும் பெண்கள், குழந்தைகள் எனச் சொல்லப்படுகிறது.

இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூரில் உள்ள பெலேஸ்வர் மகாதேவ் ஜூலேலால் கோவில் வியாழக்கிழமையன்று இந்த சோகம் நிகழ்ந்தது.

இதுவரை 14 பேர் மீட்கப்பட்டுள்ளனர் என்றும் இன்னும் ஒருவரைக் காணவில்லை என்றும் இந்தூர் மாவட்ட ஆட்சியர் டி இளையராஜா தெரிவித்துள்ளார்.

நண்பகல் 12.30 மணியளவில் தொடங்கிய மீட்பு நடவடிக்கைகள் 18 மணி நேரத்தைத் தாண்டியும் இன்னும் தொடர்ந்து வருவதாக டாக்டர் இளையராஜா குறிப்பிட்டதாக 'ஏஎன்ஐ' செய்தி கூறுகிறது.

மாண்டோரின் குடும்பத்தாருக்கு இந்தியப் பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இறந்தவர்களின் குடும்பத்தாருக்கு மாநில அரசு ரூ.5 லட்சமும் பிரதமர் இடர்தணிப்பு நிதியிலிருந்து ரூ.2 லட்சமும் இழப்பீடு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காயமடைந்தோருக்கு ரூ.50,000 இழப்பீடு அறிவிக்கப்பட்டுள்ளது.

பழங்கிணற்றை எப்படிப் பலகை கொண்டு மூட நிர்வாகம் அனுமதி அளித்தது என்று கேள்விகள் எழுந்துள்ளன.

மேலே இரும்புக் கம்பிகளைப் பொருத்தி, அவற்றின்மீது கற்பலகைகளையும் கற்காரையையும் (concrete) கொண்டு அக்கிணறு மூடப்பட்டிருந்தது என்று அக்கோவிலின் தலைமைப் பூசாரி லட்சுமிநாராயண சர்மா சொன்னதாக 'இந்துஸ்தான் டைம்ஸ்' செய்தி தெரிவிக்கிறது.