ஜப்பானியப் பிரதமரை நோக்கி புகைக்குண்டு வீச்சு; காயமின்றி தப்பினார்

1 mins read
4768bd66-2724-48c4-a03a-954265bde5e1
புகைக்குண்டை வீசியதாகச் சந்தேகிக்கப்படுபவரைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்தனர். படம்: ராய்ட்டர்ஸ் -

மேற்கு ஜப்பானில் சனிக்கிழமை (ஏப்ரல் 15) வெளிப்புற நிகழ்ச்சி ஒன்றில் சந்தேக ஆடவர் ஒருவர் புகைக்குண்டுபோல தெரியும் ஒன்றை வீசியதைத் தொடர்ந்து, ஜப்பானியப் பிரதமர் ஃபுமியோ கிஷிடா அந்த இடத்திலிருந்து வெளியேற்றப்பட்டார்.

இச்சம்பவத்தில் அவருக்கோ மற்றவர்களுக்கோ காயம் ஏற்படவில்லை என்று ஜப்பானிய ஊடகங்கள் குறிப்பிட்டன.

இச்சம்பவத்தின்போது பெரிய வெடிப்புச் சத்தம் கேட்டது. ஆனால், பிரதமர் கிஷிடா பாதுகாப்பாக ஒளிந்துகொண்டார்.

சம்பவ இடத்தில் ஆடவர் ஒருவரைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்ததாக என்எச்கே செய்தித்தளம் கூறியது.

அதன் பின்னர் பிரசார உரையைத் தொடர்ந்த திரு கிஷிடா, "முன்னர் உரை நடத்திய இடத்தில் பலத்த வெடிப்புச் சத்தம் ஏற்பட்டது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்," என்று கூறினார்.

"மக்கள் பலரும் பீதியடைந்ததற்காக நான் மன்னிப்புக் கேட்டுக்கொள்கிறேன். நமது நாட்டிற்காக முக்கியமான தேர்தலில் நாம் உள்ளோம். எனவே, நாம் இதை ஒன்றாகச் சேர்ந்து செயல்படுத்த வேண்டும்," என்று திரு கிஷிடா விவரித்தார்.

ஜப்பானிய நாடாளுமன்றத்தின் கீழவைக்குப் பல்வேறு பகுதிகளில் ஏப்ரல் 23ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கிறது.

இந்நிலையில், பாதுகாப்பை வலுப்படுத்த காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தலைமை அமைச்சரவைச் செயலாளர் ஹிரோகாஸு மட்சுனோ தெரிவித்தார்.

ஹிரோஷிமாவில் நடைபெறவுள்ள ஜி7 உச்சநிலைக் கூட்டத்தில் பாதுகாப்பை உறுதிசெய்ய தேவையான அனைத்தையும் அரசாங்கம் செய்யும் எனவும் அவர் கூறினார்.