மலேசியாவின் தெற்கு மாநிலமான ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையில் பயணத்தை எளிதாக்கும் முயற்சியாக மூன்றாவது படகுச் சேவையைத் தொடங்க ஜோகூர் மாநில அரசாங்கம் உத்தேசித்து உள்ளது.
தாம் சிங்கப்பூருக்குச் சென்றிருந்தபோது சிங்கப்பூர் அமைச்சர்களுடன் கலந்துபேசப்பட்ட அம்சங்களில் இந்தக் கூடுதல் படகுச் சேவையும் ஒன்று என ஜோகூர் முதலமைச்சர் ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்து உள்ளார்.
"ஜோகூருக்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான மூன்றாவது படகுச் சேவை பற்றி உத்தேசித்து உள்ளோம். ஜோகூரின் புத்தேரி துறைமுகத்திலிருந்து சிங்கப்பூரின் துவாஸ் செல்வதற்கான படகுப் பயணமாக அது இருக்கும்.
"இந்தப் புதிய படகுச் சேவை குறித்து சிங்கப்பூரின் போக்குவரத்து அமைச்சுடன் பேசுவதற்கு முன்பாக மலேசிய போக்குவரத்து அமைச்சின் ஒப்புதலைப் பெற வேண்டி உள்ளது," என்று திரு ஓன் ஹஃபிஸ் கூறினார்.
ஜோகூர் சட்டமன்றத்தில் பக்கத்தான் ஹரப்பான் உறுப்பினர் ஆண்ட்ரு சென் கா எங் எழுப்பிய வினாவுக்குப் பதிலளிக்கையில் முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
பிப்ரவரி மாதம் ஜோகூர் மாநில அதிகாரிகள் சிங்கப்பூர் சென்றிருந்தபோது எதுபற்றி விவாதிக்கப்பட்டது என்று திரு சென் வினவியிருந்தார்.
சிங்கப்பூருக்கும் ஜோகூருக்கும் இடையே ஏற்கெனவே இரண்டு படகுச் சேவைகள் உள்ளன. சிங்கப்பூரின் தானா மேரா படகு முனையத்திலிருந்து அவ்விரு சேவைகளும் நடைபெறுகின்றன.
தஞ்சோங் பெலுங்கோர் படகு முனையத்திற்கான படகுச் சேவை நடப்பில் இருந்தபோது கடந்த ஆண்டு ஜூலை மாதம் டெசாரு கடலோரப் படகு முனையத்திற்கு இரண்டாவது சேவை தொடங்கப்பட்டது.
சிங்கப்பூரிலிருந்து டெசாரு செல்ல ஒன்றரை மணி நேரம் ஆகும் என்று அப்போது கணிக்கப்பட்டது. டெசாரு லிங்க் படகுச் சேவை நிறுவனம் இதனை நடத்துகிறது.
டெசாரு கடலோரப் படகு முனையம் வழியாக டெசாருவுக்கும் இந்தோனீசியாவின் பாத்தாம், பிந்தான் தீவுகளுக்கும் செல்லமுடியும். ஒவ்வொரு படகிலும் 150 முதல் 330 பேர் வரை பயணம் செய்யலாம்.


