சிங்கப்பூர் முதலீட்டாளர்களுக்கு இந்தோனீசிய அதிபர் அழைப்பு

ஆசியாவின் ஆகப்பெரிய தீவான போர்னியோவில் புதிதாக உருவாகி வரும் தலைநகரில் முதல் தரத்திலான மருத்துவமனைகளையும் பல்கலைக்கழகங்களையும் கட்ட இந்தோனீசியா திட்டமிடுகிறது என்றும் இதன்மூலம் சிங்கப்பூர் முதலீட்டாளர்கள் தமது நாட்டில் பங்காளித்துவத்தை மேம்படுத்தலாம் என்றும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோ தெரிவித்துள்ளார். 

திரு விடோடோவும் சிங்கப் பூர் பிரதமர் திரு லீ சியன் லூங்கும் வியாழக்கிழமை (மார்ச் 16) ‘தலைவர்களின் ஓய்வுத்தளம்’ என்னும் சந்திப்பில் பங்கேற்க உள்ள நிலையில் ‘ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்’ செய்தித்தாளிடம் அவர் இத்தகவலைத் தெரிவித்தார். நுசந்தாரா என்னும் பெயரிலான பெருந்திட்டத்தின் விவரங்களை அவர் அப்போது வெளியிட்டார். 

அதிக மக்கள்தொகையும் நெருக்கடியும் மிகுந்த நகரில் இருந்து விவேகமானதாகவும் நீடித்து நிலைக்கக்கூடியதாகவும் உள்ள நகராக தலைநகர் இருப்பது சிறந்தது என்ற முடிவால் ஜகார்த்தாவிலிருந்து தலைநகர் மாற்றப்படுவதாக திரு விடோடோ கூறினார். 

2024ஆம் ஆண்டு முதல் அமைச்சுகளும் அரசாங்க நிறுவனங்களும் படிப்படியாக புதிய தலைநகருக்கு மாறும் என்றார் அவர். சிங்கப்பூரைப் பற்றிக் குறிப்பிட்ட திரு விடோடோ, இந்தோனீசியாவின் மிக முக்கியமான பங்காளி நாடு என்றார்.

நுசந்தாராவில் முதலீடு செய்வதன் மீதான கவனமே இரு நாடுகளிடமும் இருக்கும் என்று தாம் நம்புவதாக அவர் குறிப்பிட்டார்.

2,561 சதுர கிலோமீட்டர் பரப்பளவில், அதாவது சிங்கப்பூரைக் காட்டிலும் மூன்று மடங்கு உள்ள நிலப்பரப்பில் செயல்படுத்தப்பட உள்ள திட்டத்திற்கான செலவு 466 டிரில்லியன் ரூப்பியா (S$41 பில்லியன்) என்று மதிப்பிடப்பட்டு உள்ளதாகக் கூறிய அதிபர் விடோடோ, செலவில் 20 விழுக்காட்டை அரசாங்கமும் எஞ்சிய தொகையை தனியார் துறையும் வழங்கும் என்றார்.

“உயர்தரத்திலான ஒன்பது மருத்துவமனைகளும் ஏழு பல்கலைக்கழகங்களும் இந்தத் திட்டத்தின்கீழ் கட்டப்படும். சிங்கப்பூரில் உள்ள மவுண்ட் எலிசபெத் மற்றும் கிளனெகிள்ஸ் மருத்துவமனைகளைப் போன்றும் சிங்கப்பூரில் உள்ள பல்கலைக்கழகங்களைப் போன்றும் அவை அமைக்கப்படும்,” என்று கூறிய அவர், இந்தோனீசியாவின் பொருளியல் தற்போது நல்ல நிலையில் இருப்பதாகத் தெரிவித்தார். 

வியாழக்கிழமை (மார்ச் 16) சிங்கப்பூரில் ஓய்வுத்தளச் சந்திப்பில் பங்கேற்கும் பிரதமர் லீ சியன் லூங்கும் இந்தோனீசிய அதிபர் ஜோக்கோ விடோடோவும் கடந்த சந்திப்பின்போது இருநாடுகளுக்கும் இடையில் கையெழுத்தான மூன்று வரலாற்றுபூர்வ உடன்பாடுகள் பற்றி கலந்து ஆலோசிப்பர். 

வான்வெளி நிர்வாகம், தற்காப்பில் ஒத்துழைப்பு மற்றும் தப்பியோடியவர்களை நாடுகடத்துதல் ஆகியவற்றின் மீதான உடன்பாடுகள் அவை.

இதற்கு முன்னர், 2022 ஜனவரி மாதம் பிந்தானில் திரு லீயும் திரு விடோடோவும் சந்தித்தபோது மூன்று உடன்படிக்கைகளிலும் இருநாடுகள் கையெழுத்திடுவதைப் பார்வையிட்டனர். அந்த உடன்பாடுகளுக்கு வியாழக்கிழமை சந்திப்பில் இரு தலைவர்களும் ஒப்புதல் வழங்குவர் என்று சிங்கப்பூர் பிரதமர் அலுவலகம் நேற்று வெளியிட்ட அறிக்கை தெரிவித்தது. 

மேலும், பொருளியல், சமூக-கலாசாரம் மற்றும் பாதுகாப்பு அம்சங்களுக்கு இடையிலான இருதரப்பு பங்காளித்துவத்தை வலுப்படுத்துவது தொடர்பாகவும் அவர்கள் ஆலோசிப்பர். 

விரிவாக்கப்பட்ட கட்டமைப்பின்கீழ் ஒருங்கிணைக்கப்பட்ட இந்த மூன்று உடன்பாடுகளும் இரு நாடுகளின் நாடாளுமன்றத்தின் ஒப்புதலைப் பெறும் என்று இதற்கு முன்னர் கூறப்பட்டது.

இருப்பினும், விமானத் தகவல் வட்டார உடன்படிக்கையின் கீழான ஏற்பாடுகளுக்கு அனைத்துலக விமானப் போக்குவரத்து அமைப்பின் அங்கீகாரத்தை சிங்கப்பூரும் இந்தோனீசியாவும் இணைந்து பெறவேண்டி உள்ளது.

இந்த அங்கீகாரம் கிடைத்தால்தான் மூன்று உடன்படிக்கைகளும் ஒரேநேரத்தில் இருதரப்பும் இணக்கம் தெரிவித்த நாளில் நடப்புக்கு வரும்.

 
Article Hard Regwall
 

Register and read for free!

உங்கள் செய்தி வரம்பை எட்டிவிட்டீர்கள். மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
இன்று மேலும் 1 செய்திகளைப் படிக்கலாம். 
மேலும் படிக்க இலவசக் கணக்கு தொடங்கவும்.
 
 
ஏற்கெனவே பதிவுசெய்துள்ளீர்களா?
 
 

அண்மைய காணொளிகள்

 
 
Article Paywall 1
தடையற்ற சேவையைப் பெற, சந்தாதாரராகுங்கள்.
தொடக்க சலுகை - தனிநபர் பயன்பாட்டுக்கு மாதத்திற்கு $4.90 மட்டுமே! (ஒப்பந்தம் கிடையாது)
 
 
 
 
நாங்கள் தரமான செய்திகளை வழங்கவும் இந்த வட்டாரத்தில் தமிழ் வாசகர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும், நீங்கள் சந்தா சேர்வது உதவும்.
 
இன்னும் ஒரு செய்தியை இலவசமாக வாசிக்க
தடையற்ற சேவைக்கு சந்தாதாரராகுங்கள். TM Icon
X

அதற்குள்ளாகவா? இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!

அதற்குள்ளாகவா?
இந்தச் செய்திகளையும் படிக்கலாமே!