பாட்டாளிக் கட்சித் தலைவர் பிரித்தம் சிங், நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவின் முன்னிலையில் பொய்யுரைத்த இரண்டு குற்றச்சாட்டுகளை விசாரித்த அரசு நீதிமன்றம் சிங் குற்றவாளி எனத் தீர்ப்பளித்துள்ளது.
அரசாங்கத் தரப்பு, ஒவ்வொரு குற்றச்சாட்டின் தொடர்பிலும் அதிகபட்சம் $7,000 அபராதம் விதிக்கக் கோருகிறது.
கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரயீசா கான், நாடாளுமன்றத்தில் பொய்யுரைத்ததை அடுத்து 2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி நடந்த சந்திப்பின் முடிவில் அவர் நாடாளுமன்றத்தில் பொய்யைத் தெளிவுபடுத்துவதை சிங் விரும்பவில்லை என்று ஆதாரங்கள் காட்டுவதாக நீதிபதி லியூக் டான் கூறினார்.
இதற்கு மாறாக சிங், நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் கூறியவை யாவும் ‘அவர் வேண்டுமென்றே உரைத்த பொய்’ என்றார் நீதிபதி.
நீதிபதி லியூக் டான் திங்கட்கிழமை (பிப்ரவரி 17) காலை தமது முடிவுகளை நீதிமன்றத்தில் உரைத்தார்.
2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதி சந்தித்தபோது, பொய்கூறியதை முழுமையாக மறைக்கும்படி சிங் தன்னிடம் கூறியதாகத் திருவாட்டி கான் தெரிவித்ததை ஏற்றுக்கொள்வதாக நீதிபதி டான் கூறினார்.
அத்துடன் திருவாட்டி கான் நாடாளுமன்றத்தில் பொய்யைத் தெளிவுபடுத்த விரும்பியதாக சிங் நாடாளுமன்றச் சிறப்புரிமைக் குழுவிடம் கூறியது பொய் என்றும் நீதிபதி கூறினார்.
2021 ஆகஸ்ட் 3ஆம் தேதியன்று திருவாட்டி கான் பொய்யுரைத்ததை திரு சிங் கண்டுபிடித்த வரை நிலவிய சூழல், அதன் பிறகான அவரது நடவடிக்கைகள், பின்னர் 8ஆம் தேதி திருவாட்டி கானைச் சந்தித்துப் பொய்யுரைத்ததை ஒப்புக்கொள்ளக் கேட்டது, இவை யாவும் சிங் ஒரு கட்டத்தில் உண்மையைத் தெளிவுபடுத்த விரும்பவில்லை என்பதைத் தெளிவாகக் காட்டுவதாக நீதிபதி கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
“திருவாட்டி கான் பொய்யுரைத்த விவகாரத்தைத் தொடக்கத்தில் முனைப்புடன் கையாண்டிருந்தபோதும் இந்த விவகாரம் மீண்டும் தலைதூக்காது என்று திருவாட்டி கானிடம் பிறகு பூடகமாகத் தெரிவிக்கப்பட்டபோது சிங் எதுவும் செய்யவில்லை,” என்றார் நீதிபதி.
“திருவாட்டி கான் பொய்யுரைத்த சம்பவத்தைப் பற்றிய மேல்விவரங்களை சிங் மறுபடியும் கேட்டுவந்தார். இறுதியாகத் திருவாட்டி கான், தொலைபேசி மூலம் உண்மையை ஒப்புக்கொண்ட பிறகு சிங் தொடர்பைத் துண்டித்தார். பொய்யின் பின்விளைவுகள் குறித்து சிங் கவலையடைந்ததை இது காட்டுகிறது,” என்றும் நீதிபதி டான் கூறினார்.
2021ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ஆம் தேதிச் சந்திப்புக்குப் பிறகு எதுவுமே செய்யப்படாதது, அந்தச் சந்திப்புப் பற்றி திருவாட்டி கான் சொன்னது உண்மையாகவும் துல்லியமாகவும் இருப்பதைக் காட்டுவதாகவும் நீதிபதி கூறினார்.
அந்தச் சந்திப்புக்குப் பிறகு இரண்டு மாதங்களாகத் திருவாட்டி கானை உண்மையை ஒப்புக்கொள்ள வைப்பதற்கு சிங் வெளிப்படையாக எதுவும் செய்யவில்லை. இது, சந்திப்பின்போது சிங்கிடம் தென்பட்ட பதற்றத்திற்கு நேர்மாறாக உள்ளது என்றார் நீதிபதி.
“பொய்யுரைத்ததைத் திருவாட்டி கான், பாட்டாளிக் கட்சித் தலைவர்களிடம் ஒப்புக்கொண்ட பிறகும், குற்றஞ்சாட்டப்பட்டவரும் மற்ற தலைவர்களும் அது குறித்துத் தொடர்ச்சியாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை,” என்று நீதிபதி கூறினார்.
‘கல்லறைக்கு எடுத்துச் செல்லும்’படியான ரயீசா கானின் குறுஞ்செய்தி, முக்கிய ஆதாரம்
2021 ஆகஸ்ட் 8ல் தம் உதவியாளர்கள் லோ பெய் யிங், யுதிஷ்த்ரா நாதன் ஆகியோருக்கு அளித்த அந்தக் குறுஞ்செய்திக்கு முழுமையாக முக்கியத்துவம் தரப்பட்டதாக நீதிபதி தெரிவித்தார். அந்தக் குறுஞ்செய்தியில் திருவாட்டி கான் பொய்யுரைப்பதற்கான எந்தக் காரணமும் இல்லை என்றார் நீதிபதி.
திரு கான் உண்மையை ஒப்புக்கொள்ளவேண்டும் என்பதை சிங், அக்டோபர் 11ஆம் தேதியின்போதுதான் கட்சியின் முன்னாள் தலைவர் லோ தியா கியாங் முடிவெடுத்ததாக நீதிபதி கூறினார். அதே நாளில் திரு லோவைச் சந்தித்த சிங், அதன் பிறகுதான் பொய்யைத் தெளிவுபடுத்தும்படி திருவாட்டி கானிடம் வெளிப்படையாகக் கூறினார்.
‘உங்களை எடைபோடப் போவதில்லை’ என்று திருவாட்டி கானிடம் சிங் கூறியது, நாடாளுமன்றத்தில் உண்மையைத் தெளிவுபடுத்துவதா வேண்டாமா என்ற முடிவை அவரிடமே விட்டுவைத்தது போலத் தோன்றுவதாக நீதிபதி குறிப்பிட்டார்.
திருவாட்டி கான், சுயமாக அந்தப் பொய்யைத் தெளிவுபடுத்த முடியாது என்றும் நாடாளுமன்றத்தில் விவகாரம் மறுபடியும் எழும்போது, ஏற்கெனவே சொன்னப் பொய்யைத் தொடர்ந்து கூறுவதைத் தவிர அவருக்கு வேறு வழியில்லை என்று சிங்கிற்கு தெரியும் என்ற அரசுதரப்பு வாதத்தை ஏற்பதாக நீதிபதி கூறினார்.
‘பிரித்தமின் கூற்றுகள் உண்மைக்கு முரணானவை’
பிரித்தம் சிங் கூறியவை, உண்மைக்கு முரணாக இருப்பதாகவும் நம்பத்தகுந்தவை அல்ல என்றும் பொதுவாகக் காண்பதாக நீதிபதி கூறினார் .சிங்கின் நம்பகத்தன்மையிலும் பழுது இருப்பதாக அரசுதரப்பு முன்வைத்த வாதங்களை ஏற்பதாகவும் நீதிபதி கூறினார்.
திருவாட்டி லோ பெய்யிங், திரு யுதிஷ்த்ரா நாதன் ஆகியோரது சாட்சியங்களுடன் திருவாட்டி கானின் சாட்சியம் ஒத்துப்போகிறது, ஆனால் திரு சிங்கின் கூற்று பிறரது வார்த்தைகளுடனோ ஆவணங்களுடனோ ஒத்துப்போகவில்லை என்றார் நீதிபதி.
சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்
சிங்கின் மீது சுமத்தப்பட்ட ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் மூன்று ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை, 7,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.
தண்டனை குறித்து அரசுத் தரப்பு, ஒவ்வொரு குற்றச்சாட்டுக்கும் சிறைவாசம் இல்லாது அபராதம் மட்டுமே கோரப்போவதாக முன்னர் தெரிவிக்கப்பட்டது. இருந்தபோதும் முடிவெடுக்கும் உரிமை நீதிபதியின் கைகளில் உள்ளது.
சிங்கப்பூர்ச் சட்டப்படி, 10,000 வெள்ளிக்குமேல் அபாரதம் விதிக்கப்பட்டவரோ ஓராண்டுக்குமேல் சிறை சென்றவரோ நாடாளுமன்றத் தேர்தலில் நிற்பதற்கான தகுதியை இழந்துவிடுவார். அத்தகையவர் ஏற்கெனவே நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் அவர் அந்தப் பதவியை இழந்துவிடுவார்.
2024ஆம் ஆண்டு அக்டோபர் 14ஆம் தேதி தொடங்கிய இவ்வழக்கின் விசாரணை நவம்பர் 8ஆம் தேதி நிறைவடைந்தது.
திருவாட்டி ரயீசா கானுடன் பாட்டாளிக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் லோ பெய் யிங், யுதிஷ்த்ரா நாதன் ஆகியோரும் முன்னாள் பாட்டாளிக் கட்சித் தலைவர் லோ தியா கியாங்கும் இந்த வழக்கில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர்.