மலேசியாவில் ஜென்டிங் ஹைலண்ட்ஸ் அருகே வெள்ளிக்கிழமை (டிசம்பர் 16) ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கிக்கொண்டவர்களைத் தேடி மீட்கும் பணி சனிக்கிழமை காலை தொடர்ந்தது.
இந்நிலையில், மேலும் இரு சடலங்கள் கண்டறியப்பட்டதாக சிலாங்கூர் தீயணைப்பு, மீட்புப் பிரிவுத் தலைவர் நூரஸாம் காமிஸ் தெரிவித்தார். இன்னும் குறைந்தது 10 பேரைக் காணவில்லை.
"இரண்டாவது நாளாக தேடுதல் பணி தொடர்கிறது. மண்ணுக்கு அடியில் சிக்கிக்கொண்டவர்களுக்கு உயிர்வாயு இல்லாமல் போகலாம்," என்றார் அவர்.
உயிர் பிழைத்தவர்களில் சிலர், நிலத்துக்கடியில் ஐந்து முதல் 10 அடி ஆழத்தில் வரை சிக்கிக்கொண்டதாக திரு காமிஸ் தெரிவித்தார்.
"மண் நகர்ந்ததால் அதோடு சேர்த்து இழுத்துச் செல்லப்பட்ட சிலரது கை, கால்கள் துண்டிக்கப்பட்டன," என்று அவர் சொன்னார்.
பாத்தாங் காலி பகுதியில் ஏற்பட்ட நிலச்சரிவைத் தொடர்ந்து நடந்த தேடுதல், மீட்புப் பணி மோசமான வானிலை காரணமாக வெள்ளிக்கிழமை நள்ளிரவு வாக்கில் நிறுத்தப்பட்டது. இதுவரை 61 பேர் மீட்கப்பட்டுள்ளனர்.
உயிர் பிழைத்தவர்களில் மூன்று சிங்கப்பூரர்களும் அடங்குவர் என்று மலேசிய வெளியுறவு அமைச்சு சனிக்கிழமை காலை தெரிவித்தது.
தேடுதல், மீட்புப் பணி சனிக்கிழமை காலை 8.30 மணியளவில் தொடர்ந்தது.
இந்த அசம்பாவிதத்தைத் தொடர்ந்து சிலாங்கூர், பாகாங், ஜோகூர் உள்ளிட்ட பல மாநிலங்கள் முகாமிடுதல் மற்றும் இதர பொழுதுபோக்கு நடவடிக்கைகளைத் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளன.

