சிங்கப்பூரில் இந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில் ஆட்குறைப்பு கூடியது.
அதற்கு முந்திய காலாண்டில் ஆட்குறைப்புகள் சாதனை அளவுக்குக் குறைவாக இருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
அதேவேளையில், தொடர்ந்து இரண்டாவது காலாண்டாக ஜூலை-செப்டம்பர் மூன்று மாத காலத்தில் காலிப் பணியிடங்கள் குறைந்தன.
இதன் விளைவாக ஒட்டுமொத்த அளவில் ஊழியர் பற்றாக்குறை கொஞ்சம் குறைந்தது. 3வது காலாண்டு ஊழியர் சந்தை இறுதி அறிக்கையை மனிதவள அமைச்சு வியாழக்கிழமை வெளியிட்டது.
அதுபற்றி மனிதவள அமைச்சர் டான் சீ லெங் ஃபேஸ்புக் பக்கத்தில் கருத்து தெரிவித்தார்.
தொழிலாளர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகமாக இருந்து வருகிறது என்றாலும் புவிசார் அரசியல் நிலவரங்களும் உலகளாவிய அளவில் நிலவும் அதிக பணவீக்கமும் வருங்கால தொழிலாளர் சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று அவர் குறிப்பிட்டார்.
சிங்கப்பூரில் இந்த ஆண்டின் 3வது காலாண்டில் 1,120 பேர் ஆட்குறைப்பு செய்யப்பட்டனர். இந்த எண்ணிக்கை, அதற்கு முந்திய காலாண்டில் சாதனை அளவுக்குக் குறைந்து 830ஆக இருந்தது.
இருந்தாலும்கூட கொவிட்-19க்கு முந்திய நிலவரத்துடன் ஒப்பிடுகையில் 3வது காலாண்டில் ஆட்குறைப்பு குறைவாகவே இருந்தது என்று அமைச்சு கூறியது.
தொழில்நுட்ப நிறுவனங்களில்தான் ஆக அதிக ஊழியர்கள் வேலை இழந்தனர். இந்த நிறுவனங்களில் ஆட்குறைப்புக்கு ஆளான ஊழியர் எண்ணிக்கை 110லிருந்து 460க்கு உயர்ந்தது.
இந்தத் துறையில் வேலை வாய்ப்புகள் தொடர்ந்து அதிகமாகவே இருந்து வருகின்றன.
இதை வைத்துப் பாரக்கையில், இந்தத் துறையில் இடம்பெற்ற நிறுவன சீரமைப்புகளின் விளைவாகத்தான் அதிகம் பேர் ஆட்குறைப்புக்கு ஆளாகி இருக்கிறார்கள் என்பது தெரியவருகிறது.
வட்டார அளவிலும் உலக அளவிலும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் ஊழியர்களைக் குறைத்து இருக்கின்றன.
தொழில்நுட்பத் துறையைத் தவிர இதர துறைகளில் ஆட்குறைப்பு குறைவாக இருந்தது. சீரமைப்பு அல்லது நிறுவனங்களைத் திருத்தி அமைப்பதே அதற்கான முக்கிய காரணம்.
ஆட்குறைப்புக்கு ஆளான சிங்கப்பூர்வாசிகளின் விகிதாச்சாரம் 64.8%க்கு குறைந்தது. வாரத்தில் குறைவான நாட்கள் வேலையில் அமர்த்தப்பட்ட அல்லது தற்காலிகமாக வேலையில் இருந்து நீக்கப்பட்ட ஊழியர்களின் எண்ணிக்கை 2வது காலாண்டில் 600 ஆக இருந்தது. இது 3வது காலாண்டில் 920 ஆகக் கூடியது.
இருந்தாலும்கூட கொரோனாவுக்கு முந்திய நிலையுடன் ஒப்பிடுகையில் 3வது காலாண்டின் அளவு குறைவுதான்.
மொத்த வேலை வாய்ப்புகள் கடந்த ஜூன் மாதம் 126,100 ஆக இருந்தன. இந்த எண்ணிக்கை செப்டம்பர் மாதம் 108,200 ஆகக் குறைந்துவிட்டது. தொடர்ந்து 2வது காலாண்டாக இந்தக் குறைவு இடம்பெற்று இருக்கிறது.
இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக தொழிலாளர் பற்றாக்குறை கொஞ்சம் குறைந்தது.
இதனையொட்டிய வேலையில்லாதவர்கள், வேலை வாய்ப்புகள் இரண்டுக்கும் இடைப்பட்ட விகிதாச்சாரம் கொஞ்சம் இறங்கியது.
என்றாலும் காலிப் பணியிடங்கள் கடந்த 2019ஆம் ஆண்டைவிட தொடர்ந்து கணிசமான அளவுக்கு அதிகமாகவே இருந்தன.

