பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: பழ.நெடுமாறன் பரபரப்புத் தகவல்

பிரபாகரன் உயிருடன் இருக்கிறார்: பழ.நெடுமாறன் பரபரப்புத் தகவல்

2 mins read
68060a54-8b68-4f4b-b6ae-8f3879de32b6
தஞ்சாவூரில் செய்தியாளர்களைச் சந்தித்து, பிரபாகரன் பற்றிய தகவலை வெளியிட்டார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன். படம்: தமிழக ஊடகம் -
multi-img1 of 2

தஞ்சாவூர்: தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என்றும் அவர் விரைவில் மக்கள்முன் தோன்றுவார் என்றும் தெரிவித்து, பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன்.

பிரபாகரனின் அனுமதியுடன் இதனை தாம் அறிவிப்பதாக தஞ்சாவூரில் இன்று திங்கட்கிழமை (13-02-2023) செய்தியாளர்களைச் சந்தித்தபோது அவர் கூறினார்.

பிரபாகரனின் மனைவி, மகளும் நலமுடன் இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அதே நேரத்தில், அவர்கள் இப்போது எங்கே உள்ளனர் என்ற தகவலை இப்போது வெளியிட இயலாது என்று திரு நெடுமாறன் கூறினார். இதன் தொடர்பில் அவர் ஓர் அறிக்கையையும் வெளியிட்டார்.

'தமிழீழ தேசிய தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களைப் பற்றிய உண்மை அறிவிப்பு' என்ற தலைப்பில் 'முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம், தஞ்சாவூர்' வெளியிட்டுள்ள அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

சர்வதேசச் சூழலும் இலங்கையில் ராஜபக்சே ஆட்சியை வீழ்த்தும் அளவுக்கு வெடித்துக் கிளம்பியிருக்கிற சிங்கள மக்களின் போராட்டங்களும் தமிழீழத் தேசியத் தலைவர் அவர்கள் வெளிப்படுவதற்கான உகந்த சூழ்நிலையை உருவாக்கி உள்ளது.

இந்தச் சூழலில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் நலமுடன் இருக்கிறார் என்கிற நற்செய்தியை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களுக்கு உறுதியாகத் தெரிவிப்பதில் பெருமகிழ்ச்சியடைகிறோம். இதுவரை அவரைப் பற்றித் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட யூகங்களுக்கும் ஐயங்களுக்கும் இது முற்றுப்புள்ளி வைக்கும் என்று நம்புகிறோம்.

தமிழீழ மக்களின் விடியலுக்கான திட்டத்தை அவர் விரைவில் அறிவிக்க இருக்கிறார். தமிழீழ மக்களும் உலகத் தமிழர்களும் ஒன்றுபட்டு நின்று அவருக்கு முழுமையான ஆதரவினை அளிக்க முன்வருமாறு வேண்டுகிறோம்.

விடுதலைப் புலிகள் வலிமையாக இருந்த காலம் வரை இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதையும் தங்கள் மண்ணில் காலூன்ற அனுமதிக்கவில்லை. இந்தியாவுக்கு எதிரான நாடுகள் எதனுடனும் எந்தக் காலகட்டத்திலும் எத்தகைய உதவியும் பெறுவதில்லை என்பதில் தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் மிக உறுதியாக இருந்தார். தற்போது இலங்கையில் ஆழமாக காலூன்றி இந்திய எதிர்ப்புத் தளமாக அதை ஆக்கும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளதையும் இந்துமாக்கடலின் ஆதிக்கம் சீனாவின் பிடியில் சிக்கும் அபாயம் இருப்பதையும் எண்ணிப் பார்த்து அதைத் தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என இந்திய அரசை வேண்டுகிறோம்.

இந்த முக்கியமான காலகட்டத்தில் தமிழ்நாடு அரசும், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் தமிழ்நாட்டு மக்களும் ஒன்றுபட்டு தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களுக்கு துணை நிற்குமாறு வேண்டிக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.