தலைநகர் சென்னையைத் தொடர்ந்து, மாநிலத்தின் மற்ற முக்கிய நகரங்களிலும் மெட்ரோ ரயில் சேவையைத் தொடங்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது.
அந்த வகையில், மதுரையில் மெட்ரோ ரயில் சேவையைக் கொண்டுவருவது தொடர்பில் ஈராண்டுகளுக்கு முன்னரே நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் வரவுசெலவுத் திட்ட அறிக்கையைத் தாக்கல் செய்தபோது குறிப்பிட்டிருந்தார்.
இந்நிலையில், மதுரையில் மெட்ரோ ரயில் சேவையை விரைந்து கொண்டுவரும் வகையில் விரிவான திட்ட அறிக்கைக்குத் தமிழக அரசு ஒப்பந்தப்புள்ளி கோரியுள்ளது.
சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் இணையம் வழியாக விடுத்துள்ள அந்த ஒப்பந்தப்புள்ளியின் மதிப்பு ரூ.3 கோடி. 120 நாள்களுக்குள் விரிவான திட்ட அறிக்கையைத் தயார்செய்து தர வேண்டும்.
திருமங்கலத்தில் இருந்து ஒத்தக்கடை வரைக்குமான அந்த 31 கி.மீ. நீள மெட்ரோ ரயில் சேவை தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை அண்மையில் தமிழக அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது.
மொத்தம் 20 நிலையங்களை அமைக்கப் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது. உயர்மட்ட இருப்புப்பாதை வழியாக மூன்று பெட்டிகளுடன் ரயில்களை இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மணிக்கு 25 கி.மீ. வேகத்தில் ரயில்கள் இயக்கப்படலாம் என்றும் அதிகபட்சமாக வேகம் 60 கி.மீ. என்றும் தெரிவிக்கப்பட்டது.
"திட்டத்திற்கான செலவு, கட்டுமானம், நடைமுறைப்படுத்தும் உத்திகள், சமூக, பொருளியல் தாக்கங்கள் எனப் பல்வேறு அம்சங்கள் குறித்து விரிவான திட்ட அறிக்கை ஆராயும்," என்று சென்னை மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
"மதுரைக் கல்லூரி நிலையத்தில் இருந்து ஒரு தடத்தை மட்டும் கொண்டிருக்கும் வகையில் ரயில் பாதை இரண்டாகப் பிரிந்து, பின்னர் கோரிப்பாளையத்தில் மீண்டும் இணையும்," என்று சாத்தியக்கூறு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தொடர்புடைய செய்திகள்
மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ.8,000 கோடி செலவாகலாம் எனக் கூறப்படுகிறது.
இந்நிலையில், விரிவான திட்ட அறிக்கையைத் தயாரிப்பதற்கான நிறுவனத்தைத் தேர்வுசெய்ய ஒப்பந்தப்புள்ளி கோரி இருப்பதை மதுரை நாடாளுமன்றத் தொகுதி உறுப்பினர் சு.வெங்கடேசன் வரவேற்றுள்ளார்.