பாத்தாங் காலி நிலச்சரிவு: மண்ணுக்கு அடியில் 7 மீட்டர் ஆழத்தில் மேலும் நான்கு சடலங்கள் கண்டெடுப்பு

பாத்தாங் காலி நிலச்சரிவு: மண்ணுக்கு அடியில் 7 மீட்டர் ஆழத்தில் மேலும் நான்கு சடலங்கள் கண்டெடுப்பு

1 mins read
b6a07146-9b8f-4885-a8f1-c4bb6bd46dba
தேடுதல், மீட்புப் பணியின்போது வியாழக்கிழமை (டிசம்பர் 22) கண்டெடுக்கப்பட்ட ஒரு சடலம். படம்: தி ஸ்டார் -

கெந்திங் மலை அருகே பாத்தாங் காலியில் நிலச்சரிவு ஏற்பட்ட பகுதியிலிருந்து மேலும் நால்வரின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆற்றங்கரை பகுதியில், மண்ணுக்கு அடியில் 7 மீட்டர் ஆழத்தில் அந்தச் சடலங்கள் கண்டறியப்பட்டன.

இதன்மூலம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 30ஆக அதிகரித்துள்ளது. காணாமல்போன மூவரை இன்னும் காணவில்லை. "ஓர் ஆண் குழந்தை, ஒரு பெண் குழந்தை, இரு பெரியவர்களின் சடலங்கள் அவை. சடலங்கள் முழுமையாக இருந்தாலும், அவை அழுகத் தொடங்கிவிட்டன," என்று ஹுலு சிலாங்கூர் காவல் அதிகாரி சுஃபியான் அப்துல்லா வியாழக்கிழமை (டிசம்பர் 22) கூறினார்.

சடலங்களை அடையாளம் காணவும் பிரேதப் பரிசோதனை செய்யவும் சுங்கை புலோ மருத்துவமனைக்கு அவை அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

"சடலங்களை அடையாளப்படுத்தும் செயல்முறை இன்னும் செய்யப்படாததால், அவை அனைத்தும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவையா என்பதை எங்களால் உறுதிப்படுத்த இயலாது," என்றார் அவர்.

ஏழாவது நாளாக தொடரும் தேடுதல், மீட்பு நடவடிக்கையில் 128 ஊழியர்கள், நிலத்தைத் தோண்டும் 11 இயந்திரங்கள், ஏழு 'கே9' நாய்கள் ஆகியவை ஈடுபடுத்தப்பட்டன. குறிப்பாக மலை, ஆற்றங்கரை பகுதிகளில் கவனம் செலுத்தப்படும் என்று திரு சுஃபியான் தெரிவித்தார்.