தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

'மலேசியப் பெண்கள் வெளிநாட்டில் பெற்றுக்கொள்ளும் பிள்ளைகளுக்கு குடியுரிமை'

2 mins read
aa07ffda-5cd3-49d4-ba32-72496d7bf037
இப்போதைக்கு, வெளிநாடுகளில் மலேசியத் தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகள் மட்டுமே தானாகவே மலேசியக் குடியுரிமைக்குத் தகுதிபெறுகின்றனர். படம்: புளூம்பெர்க் -

வெளிநாட்டினரை மணந்துகொள்ளும் மலேசியப் பெண்கள், வெளிநாட்டிலேயே பெற்றுக்கொள்ளும் குழந்தைகளுக்குத் தானாகவே மலேசியக் குடியுரிமை வழங்கப்படும் வகையில் அரசியலமைப்புச் சட்டத் திருத்த முன்வரைவிற்கு மலேசிய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

உள்துறை அமைச்சர் சைஃபுதீன் நசுஷன் இஸ்மாயிலும் பிரதமர் துறை அமைச்சர் (சட்டம் மற்றும் நிறுவனச் சீர்திருத்தம்) அஸலினா ஒஸ்மான் சாயிட்டும் நேற்றுக் காலை ஒரு கூட்டறிக்கை வாயிலாக இதனைத் தெரிவித்தனர்.

இப்போதைக்கு, வெளிநாடுகளில் மலேசியத் தந்தையருக்குப் பிறக்கும் குழந்தைகள் மட்டுமே தானாகவே மலேசியக் குடியுரிமைக்குத் தகுதிபெறுகின்றனர்.

இந்நிலையில், பல பத்தாண்டுகால விவாதத்திற்குப் பிறகு, குழந்தைகளுக்குக் குடியுரிமை வழங்குவதில் பாலின சமத்துவத்தைப் பின்பற்ற மலேசிய அமைச்சரவை இணக்கம் தெரிவித்துள்ளது.

மலேசியாவில் பெண்களுக்கு எதிரான பாகுபாட்டை ஒழிக்கவும் குடியுரிமை தொடர்பான சட்ட விதிகளில் உள்ள குறைகளைக் களையவும் அரசாங்கம் உறுதியாக இருக்கிறது என்று அமைச்சர்களின் கூட்டறிக்கை தெரிவிக்கிறது.

"தங்கள் பிள்ளைகளுக்குக் குடியுரிமை கேட்டு பெண்கள் பலர் விண்ணப்பம் செய்துள்ள நிலையில், தேக்கமடைந்துள்ள விண்ணப்பங்கள்மீது நடவடிக்கை எடுக்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது," என்றும் அமைச்சர்கள் கூறினர்.

கூட்டரசு அரசியலமைப்புச் சட்ட அட்டவணையில் இடம்பெற்றுள்ள 'தந்தை' என்ற சொல் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக 'பெற்றோரில் எவரேனும் ஒருவர்' என்ற சொற்கள் சேர்க்கப்படும் என்று அமைச்சர்கள் குறிப்பிட்டனர்.

இதன்மூலம், கூட்டரசு அரசியலமைப்புச் சட்டத்தின்கீழ் மலேசியத் தாய்மார்களுக்கும் சம உரிமை கிடைக்க வழிவகுக்கப்படும் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

நடப்பு நாடாளுமன்ற அமர்விலேயே அந்தச் சட்டத் திருத்த மசோதா தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அந்தச் சட்டத் திருத்தம் நிறைவேற, குறைந்தது மூன்றில் இரண்டு பங்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவளிக்க வேண்டும். அதாவது, மலேசிய நாடாளுமன்றத்தில் 222 உறுப்பினர்களில் குறைந்தது 148 பேர் அம்மசோதாவை ஆதரிக்க வேண்டும்.

குடியுரிமைச் சட்டங்கள் தொடர்பான இதர திருத்தங்கள் குறித்து உள்துறை அமைச்சின்கீழ் அமைக்கப்படும் ஒரு குழு ஆராய்ந்து, அமைச்சரவையிடம் அறிக்கை தாக்கல் செய்யும் என்று தெரிவிக்கப்பட்டது.

உலகில் தாய்மார்களைப் பாதிக்கக்கூடிய சம உரிமையற்ற குடியுரிமைச் சட்டங்களை 22 நாடுகள் கொண்டுள்ளன. ஆசியாவைப் பொறுத்தமட்டில், மலேசியா, புருணை என இருநாடுகளில் மட்டுமே அத்தகைய சட்டம் இருக்கிறது.

இத்தகைய பாகுபாட்டுடன் கூடிய குடியுரிமைச் சட்டத்தை எதிர்த்து, மலேசியத் தாய்மார்கள் குழு ஒன்று கடந்த 2020 டிசம்பரில் நீதிமன்றத்தை அணுகியது. 2021 செப்டம்பரில் உயர் நீதிமன்றம் அவர்களுக்குச் சாதகமாகத் தீர்ப்பு வழங்கியது.

அத்தீர்ப்பை எதிர்த்து மலேசிய அரசாங்கம் மேல்முறையீடு செய்ய, குடிமைச் சமூக அமைப்புகளும் அமைச்சர் ஒருவரும் அதனைக் கடுமையாக விமர்சித்தனர்.