கடற்பாலத்தில் ஒற்றை நுழைவு அனுமதி முறை: மலேசியா யோசனை

2 mins read
a0671a0f-a6ee-44eb-83de-18a923c34d9f
வார இறுதிகளில் கடற்பாலத்தில் லாரிகளுக்கான தடத்தைப் பயணிகள் பயன்படுத்த அனுமதிக்கும் யோசனையையும் மலேசியா முன்வைத்துள்ளது. படம்: பெரித்தா ஹரியான் -

ஜோகூர் பாரு: சிங்கப்பூரையும் மலேசியாவையும் இணைக்கும் ஜோகூர் கடற்பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் நோக்கில் 'ஒற்றை குடிநுழைவு அனுமதி முறை'யை மலேசியா முன்மொழிந்துள்ளது.

இம்முறைப்படி, சிங்கப்பூர் அல்லது மலேசியா எல்லையில் ஏதேனும் ஓரிடத்தில் குடிநுழைவு அனுமதி பெற்றால் போதும் என்று ஜோகூர் பணிகள், போக்குவரத்து, உள்கட்டமைப்புக் குழுவின் தலைவர் முகம்மது ஃபஸ்லி முகம்மது சாலே தெரிவித்தார்.

"அதாவது, ஜோகூரில் மலேசிய சோதனைச்சாவடிகளில் சிங்கப்பூர் குடிநுழைவுத்துறை அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டிருப்பர். அதன்மூலம் சிங்கப்பூர் செல்லும் பயணிகளுக்கு அங்கேயே அவர்கள் நுழைவு அனுமதி வழங்கிவிடலாம். அதுபோல, சிங்கப்பூர் சோதனைச்சாவடியில் இருக்கும் மலேசிய குடிநுழைவுத்துறை அதிகாரிகள், மலேசியா செல்ல விரும்பும் பயணிகளுக்குக் அங்கேயே நுழைவு அனுமதி வழங்குவர்," என்று திரு முகம்மது ஃபஸ்லி விளக்கினார்.

"இந்தப் பரிந்துரை இன்னும் தொடக்க நிலைகளிலேயே உள்ளது. 2026ஆம் ஆண்டு முதல் செயல்பாட்டிற்கு வரவிருக்கும் விரைவு ரயில் போக்குவரத்துத் திட்டத்திலும் இதுபோன்ற முறையே பின்பற்றப்படவுள்ளது," என்று அவர் சொன்னதாக 'தி ஸ்டார்' செய்தி வெளியிட்டுள்ளது.

கடற்பாலத்திலும் துவாஸ் இரண்டாம் பாலத்திலும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வழிமுறைகளை ஆராய்வதற்கான பணிக்குழுவிற்கு திரு ஃபஸ்லி தலைமை வகிக்கிறார்.

இருவழிகளிலும் மோட்டார்சைக்கிள் தடங்களின் எண்ணிக்கையை 50லிருந்து 75ஆக உயர்த்த ஜோகூர் கூடுதல் நிதி கோரியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

வார இறுதிகளில் லாரிகளுக்கான தடத்தைப் பயணிகள் பயன்படுத்த அனுமதிக்கும் யோசனையை முன்வைத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராகிம் அண்மையில் சிங்கப்பூர் வந்திருந்தபோது, கடற்பாலத்தில் போக்குவரத்து நெரிசலைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜோகூர் மாநில முதல்வர் ஒன் ஹஃபிஸ் காஸி வேண்டுகோள் விடுத்திருந்தார்.