மலேசியா செல்லும் அனைத்துப் பயணிகளுக்கும் காய்ச்சலுக்கான உடல்வெப்பப் பரிசோதனைகள் நடத்தப்படவுள்ளன.
மேலும், சீனாவிலிருந்து வரும் விமானங்களிலிருந்து கழிவுநீரைச் சேகரித்து அது பரிசோதனைகளை நடத்தவுள்ளது.
மலேசிய சுகாதார அமைச்சர் ஸலிஹா முஸ்தஃபா அது குறித்த அறிக்கையை வெள்ளிக்கிழமை (டிச. 30) அன்று தெரிவித்தார்.
சீனாவில் தொற்று எண்ணிக்கை வெகுவாக உயர்ந்துள்ள நிலையில் மலேசியா புதிய நடவடிக்கைகளை அறிவித்துள்ளது.
சீனா உள்ளிட்ட எல்லா நாடுகளிலிருந்து வரும் அனைத்துப் பயணிகளுக்கும், அனைத்துலகப் பயணிகள் நுழையும் இடங்களில் காய்ச்சலுக்கான பரிசோதனைகள் நடத்தப்படும்.
காய்ச்சல் அல்லது மற்ற அறிகுறிகள் உள்ளவர்கள் தனிமைப்படுத்தப்படுவர் அல்லது கூடுதல் பரிசோதனைகளுக்காக சுகாதார அதிகாரிகளிடம் அனுப்பப்படுவர்.
சீனாவிலிருந்து வரும் விமானங்களிலிருந்து சேகரிக்கப்படும் கழிவுநீர் மாதிரிகளின்மீது முதலில் பிசிஆர் பரிசோதனைகளும் பின்னர் மரபணுப் பரிசோதனைகளும் நடத்தப்படும்.
மேலும், மலேசியா செல்வதற்கு முன்பான 14 நாள்களில் சீனாவுக்குச் சென்று வந்தவர்கள், விரைவுப் பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என்று அவரது அறிக்கை கூறியது.
கொவிட்-19 கிருமிக்கு எதிராக மலேசியா அதன் கண்காணிப்பை அதிகரித்ததன் ஒரு பகுதியாக இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என்று டாக்டர் ஸலிஹா தெரிவித்தார்.
மலேசியாவில் தொற்றுப் பரவலைக் கட்டுக்குள் வைக்கவும் புதிய கிருமிவகைகள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்கவும் அது உதவும் என்றார் அவர்.
இவ்வேளையில் சீனா அதன் எல்லைகளைத் திறந்துவிட்டுள்ள நிலையில், மலேசியாவில் விமானச் சேவைகளுக்கான தேவை அதிகரிக்கும் என்று அந்நாட்டுப் போக்குவரத்து அமைச்சர் ஆண்டனி லோக் கூறினார்.
சீன நாட்டவர் அதிகம் செல்ல விரும்பும் பத்து நாடுகளில் மலேசியாவும் ஒன்று என செய்தி ஒன்று கூறியுள்ளது.

