மலேசியாவின் ஒன்பதாவது பிரதமராக அம்னோ கட்சித் துணைத் தலைவர் இஸ்மாயில் சப்ரி தேர்தெடுக்கப்பட்டுள்ளார்.
அவரின் அதிகாரபூர்வ பதவியேற்பு சடங்கு நாளை (ஆகஸ்ட் 21ஆம் தேதி) பிற்பகல் 2.30 மணிக்கு நடைபெறும் என்று இஸ்தானா நெகாரா பேச்சாளர் இந்திரா அஹ்மாட் ஃபாடில் ஷம்சுடின் இன்று (ஆகஸ்ட் 20ஆம் தேதி) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
அந்த அறிக்கையில் புதிய பிரதமரின் பதவியேற்புக்கு பிறகு, நாட்டின் அரசியல் நெருக்கடிக்கு துரித தீர்வு காண்பதிலும் எல்லா நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாட்டின் நலனை கருதி கொவிட்-19 கிருமித்தொற்றை சமாளிக்க ஒன்றுசேர்ந்து கூட்டாக செயல்படுவதிலும் தாம் நம்பிக்கை கொண்டுள்ளதாக நாட்டின் மாமன்னர் தெரிவித்தார்.
கொவிட்-19 கிருமித்தொற்று காரணத்தினால் நாடே சுகாதார, பொருளியல் மந்தநிலை சவால்களை எதிர்கொள்ள, மக்கள் அரசியல் நெருக்கடி பிரச்சினைகளையும் சுமப்பது சரியல்ல என்று மாமமன்னர் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டின் அடுத்த பிரதமராக ஆவதற்கு திரு இஸ்மாயில் சப்ரி யாக்கோப்புக்கு 114 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவு இருந்தது.
அதோடு அம்னோ மற்றும் பெரிக்கத்தான் நேஷனல் ஆகிய அரசியல் கட்சிகளும் அவருக்கு ஆதரவு நல்கின.

