கிளியால் சிக்கிய கொலையாளி

2 mins read
71bcd229-d4f8-459c-98c7-6bd498584569
கொலைக்குப்பின் உணவு, நீர் அருந்தாமல் கிளி அமைதியாகிவிட்டதாகக் கூறப்பட்டது. மாதிரிப்படம் -

கிளி காட்டிக்கொடுத்ததால் கொலையாளி சிக்கிய சம்பவம் இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்துள்ளது.

ஆக்ரா நகரில் முன்னணி நாளிதழ் ஒன்றின் தலைமை ஆசிரியராக இருந்தவர் விஜய் சர்மா. இவரின் மனைவி நீலம் சர்மா கடந்த 2014 பிப்ரவரி 20ஆம் தேதி தம் வீட்டில் மாண்டு கிடந்தார்.

அவர்களது வீட்டில் இருந்த பணமும் நகைகளும் கொள்ளைபோயின. கொலையாளிகளைப் பற்றிய எந்தத் தடயமும் காவல்துறைக்கு கிடைக்கவில்லை.

சம்பவ நாளன்று தம் மகன் ராஜேஷ், மகள் நிவேதிதா இருவருடனும் ஃபிரோஸாபாத்தில் ஒரு திருமணத்தில் கலந்துகொள்ளச் சென்றுவிட்டார் திரு விஜய் சர்மா.

இரவு வீடு திரும்பியதும் தம் மனைவியும் வளர்ப்பு நாயும் ரத்த வெள்ளத்தில் கிடந்ததைக் கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். காவல்துறைக்குத் தகவல் கூறப்பட்டபின், சந்தேகத்தின்பேரில் சிலர் கைதுசெய்யப்பட்டனர்.

திருவாட்டி நீலம் இறந்தபின் அக்குடும்பத்தினர் வளர்த்த செல்லக் கிளி உணவு, நீர் அருந்தாமல், அமைதியாகிப்போனது. அதனால், அக்கிளி கொலையைப் பார்த்திருக்கலாம் என்று திரு விஜய் சந்தேகப்பட்டார்.

அந்த எண்ணத்தில், தான் சந்தேகப்படுபவர்களின் பெயர்களை ஒவ்வொன்றாகக் கிளியிடம் அவர் சொன்னார். அப்போது, அஷு என்பவரின் பெயரைச் சொன்னதும் கிளியும் 'அஷு அஷு' எனக் கத்தியது.

காவல்துறையினருக்கு முன்பாக அஷுவின் பெயரைச் சொன்னபோதும் கிளி அவ்வாறே கத்தியது.

அதனைத் தொடர்ந்து, அஷுவைப் பிடித்து விசாரித்தபோது, தன் கூட்டாளி ரோனி என்பவனுடன் சேர்ந்து திருவாட்டி நீலத்தைக் கொன்றதை அவன் ஒப்புக்கொண்டான்.

அஷு, திரு விஜய் குடும்பத்தினரின் உறவினன் என்பது குறிப்பிடத்தக்கது. பணத்திற்காகவும் நகைக்காகவும் அவன் கொலை செய்ததாகக் கூறப்பட்டது. திருவாட்டி நீலத்தை 14 முறையும் நாயை ஒன்பது முறையும் அவன் கத்தியால் குத்திக் கொன்றான்.

இந்நிலையில், கொலை நடந்து ஒன்பதாண்டுகளுக்குப் பிறகு கடந்த வியாழக்கிழமை (மார்ச் 23) அஷுவிற்கும் ரோனிக்கும் வாழ்நாள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

ஆனாலும், அஷுவைத் தூக்கில் போட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவிருப்பதாக திருவாட்டி நிவேதிதா சொன்னதாக இந்தியா டுடே செய்தி தெரிவிக்கிறது.

கொலை நடந்த ஆறு மாதங்களுக்குப் பிறகு கிளி இறந்துவிட்டது. கடந்த 2020 நவம்பர் 14ஆம் தேதி திரு விஜய் சர்மாவும் இறந்துபோனார்.