கோல்டன் மைல் கார் நிறுத்துமிடத்தில் இறந்துகிடந்த ஆடவர்

கோல்டன் மைல் கார் நிறுத்துமிடத்தில் இறந்துகிடந்த ஆடவர்

1 mins read
eebb68ea-8600-4b80-b23b-e00d0655e4a5
கோல்டன் மைல் காம்ப்ளக்ஸ் கார்பேட்டையில் விசாரணையில் ஈடுபடும் காவல்துறை அதிகாரிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -
multi-img1 of 2

பீச் ரோட்டில் இருக்கும் கோல்டன் மைல் காம்ப்ளக்ஸ் கார் நிறுத்துமிடத்தில் 70 வயது ஆடவர் ஒருவர் சனிக்கிழமை (பிப்ரவரி 25) காலையில் இறந்துகிடக்கக் காணப்பட்டார்.

இச்சம்பவம் குறித்து காலை 9 மணிக்கு தனக்குத் தகவல் அளிக்கப்பட்டதாகக் குறிப்பிட்ட காவல்துறை, சம்பவ இடத்துக்கு வந்தபோது அந்த ஆடவர் அசைவின்றி கிடந்ததைக் கண்டது.

அந்த ஆடவரைப் பரிசோதித்த சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை மருத்துவ உதவியாளர், அவர் மரணமடைந்துவிட்டதாகக் கூறினார்.

இந்தச் சம்பவத்தை வழக்கத்திற்கு மாறான மரணம் என்று வகைப்படுத்தியுள்ள காவல்துறை, ஆடவரின் மரணத்தில் சூது இருப்பதாகத் தெரியவில்லை என்று கூறியது.

கோல்டன் மைல் காம்ப்ளக்ஸ் கட்டடத்துக்கு முன்னால் குறைந்தது நான்கு காவல்துறை வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்ததாக அங்கிருந்த வழிப்போக்கர் ஒருவர் கூறினார்.

அந்த ஆடவரைத் தெரிந்த கோல்டன் மைல் காம்ப்ளக்ஸ் கடைக்காரர்கள், சிறிது காலமாக அவருக்கு உடல்நலம் சரியில்லை என்றனர். அவருடைய கால்கள் வீக்கமாக இருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

கையில் மதுபானப் புட்டியுடன் அந்த ஆடவர் கோல்டன் மைல் கடைத்தொகுதிக்குள் அடிக்கடி வந்து சென்றதாக அங்குள்ள உணவகம் ஒன்றில் வேலை செய்யும் ஊழியர் ஒருவர் சொன்னார்.

கோல்டன் மைல் காம்ப்ளக்சில் கைப்பேசி கடை நடத்தும் ஒருவர், மதுபானப் பழக்கத்தைக் கைவிடுமாறும் ஆரோக்கியத்தைக் கவனித்துக்கொள்ளுமாறும் அந்த ஆடவருக்கு தாம் அறிவுறுத்தி இருந்ததாகக் கூறினார்.

முன்னதாக அந்த ஆடவர், அருகிலுள்ள குடியிருப்புப் பகுதியில் வசித்ததாக அந்தக் கடைக்காரர் குறிப்பிட்டார். ஆடவரின் மரணம் குறித்து காவல்துறை விசாரணை தொடர்கிறது.