மலேசியா: காரில் பொட்டலம் வெடித்ததில் ஆடவர் உயிரிழப்பு

மலேசியா: காரில் பொட்டலம் வெடித்ததில் ஆடவர் உயிரிழப்பு

1 mins read
8672f569-f4ea-4897-904d-3d2143ddd270
-

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் காரில் வைக்கப்பட்டிருந்த பொட்டலம் ஒன்று வெடித்ததில் உணவக ஊழியர் ஒருவர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.

அம்பாங்கின் பாண்டான் இன்டா எனும் பகுதியில் அந்த 28 வயது ஆடவரின் வேலையிடத்துக்கு வெளியே இந்தச் சம்பவம் நிகழ்ந்தது. இச்சம்பவத்தைக் காவல்துறையினர் கொலை என்று வகைப்படுத்தியுள்ளனர்.

இரவு 8.55 மணியளவில் காரில் வைக்கப்பட்டிருந்த அந்தப் பொட்டலத்தை அவர் சோதித்துக்கொண்டு இருந்தபோது அது வெடித்ததாக காவல்துறை கூறியது.

"பாதிக்கப்பட்டவருக்கு உடலிலும் கைகளிலும் கடுமையான காயங்கள் ஏற்பட்டன," என்று காவல்துறை அதிகாரி முகம்மது ஃபரூக் இஷாக் வெளிக்கிழமை இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.

மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்ததாக திரு ஃபருக் கூறினார்.

வெள்ளிக்கிழமை காலை சம்பவ இடத்தில் ரத்தக்கறை காணப்பட்டது. அந்த உணவகத்துக்கு அருகில் உள்ள அப்பகுதியைச் சுற்றி காவல்துறையினர் தடுப்புவேலி அமைத்தனர். விசாரணை அதிகாரிகள் தடயங்களைத் தேடினர்.

அந்த ஆடவரது காரின் முன்பகுதி நசுங்கியிருந்தது.

இறந்தவருக்குப் பிரேதப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அம்பாங் மருத்துவனையில் அவருடைய குடும்பத்தினர் திரண்டனர். சவக்கிடங்கைவிட்டு வெளியேறிய அவர்கள், செய்தியாளர்களிடம் பேச மறுத்துவிட்டனர்.