வாஷிங்டன்: அமெரிக்காவின் லூயிசியானா மாநிலத்தில் கடந்த 2021ஆம் ஆண்டு ஐந்து வயது இந்திய வம்சாவளிச் சிறுமியைக் கொன்ற ஆடவருக்கு 100 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகச் செய்திகள் தெரிவித்துள்ளன.
மியா பட்டேல் என்ற அச்சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் ஷ்ரீவ்போர்ட் நகரைச் சேர்ந்த ஜோசஃப் லீ ஸ்மித், 35, என்ற அந்த ஆடவர் குற்றவாளி என்று கடந்த ஜனவரி மாதம் அறிவிக்கப்பட்டது.
ஹோட்டல் அறையில் மியா விளையாடிக்கொண்டிருந்தபோது அவளது தலையில் குண்டுபாய்ந்தது. உடனடியாக அவள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டாள். ஆனாலும், மூன்று நாள்களுக்குப் பிறகு, அதாவது 2021 மார்ச் 23ஆம் தேதி அவளது உயிர் பிரிந்தது.
'சூப்பர் 8 மோட்டல்' என்ற அந்த ஹோட்டல் அச்சமயத்தில் விமல் - சிநேகா பட்டேல் இணையருக்குச் சொந்தமானதாக இருந்தது. மியா உட்பட தங்களது இரு குழந்தைகளுடன் அவர்கள் அந்த ஹோட்டலின் தரைத்தளத்தில் குடியிருந்தனர்.
சம்பவ நாளன்று அந்த ஹோட்டலின் வாகன நிறுத்தப் பகுதியில் ஸ்மித், இன்னொருவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக நீதிமன்ற விசாரணையின்போது தெரிவிக்கப்பட்டது.
ஆத்திரத்தில் அவன் தனது கைத்துப்பாக்கியை எடுத்து எதிராளியை நோக்கிச் சுட, குண்டு குறிதவறி மியாவின் தலையில் பாய்ந்தது. பின்னர் அக்குண்டு மியாவின் தாய் சிநேகாவையும் உரசிச் சென்றது.
இந்நிலையில், மியா இறந்து சரியாக ஈராண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2023 மார்ச் 23ஆம் தேதி ஸ்மித்துக்கு நூறாண்டுச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது.
மேலும், அவனுக்குத் தற்காலிக விடுப்போ (parole) நன்னடத்தையின் அடிப்படையில் தண்டனைக்காலக் குறைப்போ வழங்கப்படக்கூடாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.


