எஸ்பிஹெச் மீடியா டிரஸ்ட் (எஸ்எம்டி) நிறுவனத்துக்கு அடுத்த ஐந்தாண்டு காலத்திற்கான $900 மில்லியன் நிதி ஆதரவை இன்னும் தொடங்கவில்லை என்று தொடர்பு தகவல் அமைச்சு தெரிவித்துள்ளது.
செய்தித்தாள் விநியோகத் தரவுகளில் முரண்பாடுகள் இருந்ததாக எஸ்பிஹெச் மீடியா இம்மாதம் 9ஆம் தேதி முதன்முதலாக அறிவித்தது.
அறிவிக்கப்பட்ட முரண்பாட்டுத் தரவுகள் அந்நிறுவனத்துக்கு நிதி ஆதரவு அளிக்கும் முடிவையும் நிதி ஆதரவுக்கு அரசாங்கம் செய்திருக்கும் கடப்பாட்டையும் பாதித்திருக்குமா என்பது குறித்து அமைச்சு மறுஆய்வு செய்துவருவதாக அமைச்சின் பேச்சாளர் கூறியுள்ளார்.
செய்தித்தாள் விநியோகத் தரவுகளை இன்னும் முழுமையாக ஆராயுமாறு நிறுவனத்தின் இயக்குநரவை தனது கணக்காய்வுக் குழுவைக் கேட்டுக்கொண்டுள்ள நிலையில் எஸ்பிஹெச் மீடியாவின் அறிவிப்பு குறித்து வெள்ளிக்கிழமை (ஜனவரி 20) கருத்து கேட்கப்பட்டபோது அமைச்சு இவ்வாறு தெரிவித்தது.
நிறுவனம் தனது உள் மறுஆய்வின் தரவுகள் தொடர்பான அறிக்கையையும் அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளையும் அமைச்சு கவனத்தில் கொண்டுள்ளதாக பேச்சாளர் கூறினார்.
இந்த விவகாரத்தை இன்னும் முழுமையாக புலன்விசாரணை செய்யுமாறு தனது கணக்காய்வு மற்றும் இடர்ப்பாட்டுக் குழுவை எஸ்பிஹெச் மீடியா ஹோல்டிங்ஸ் இயக்குநரவைக் கேட்டுக்கொண்டது குறித்தும் அமைச்சு குறித்துக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.
"விசாரணை முடிவுகள் தயாரானதும் அவற்றை அமைச்சிடம் பகிர்ந்துகொள்ளுமாறு எஸ்பிஹெச் மீடியா ஹோல்டிங்ஸ் இயக்குநரவையை அமைச்சு கேட்டுக் கொண்டு உள்ளது. இந்த விவகாரத்தில் அதன் முழு ஒத்துழைப்பை அமைச்சு எதிர்பார்க்கிறது.
"முரண்பாடுகள், எஸ்எம்டிக்கு நிதி ஆதரவு அளிப்பது என்ற முடிவையும் நிதி ஆதரவுக்கு அரசாங்கம் தெரிவித்த கடப்பாட்டையும் பாதித்து இருக்குமா என்பது குறித்து அமைச்சு தனது சொந்த மறுஆய்வை நடத்தி வருகிறது.
"இதுநாள் வரை எஸ்எம்டிக்கு நிதி ஆதரவு தொடங்கப்படவில்லை. உரிய நேரத்தில் இதுகுறித்த விவரங்களைப் பகிர்ந்துகொள்வோம்," என்று அமைச்சின் பேச்சாளர் விளக்கினார்.
சிங்கப்பூர் பிரஸ் ஹோல்டிங்ஸ் லிமிடெட் குழுமத்திடம் இருந்து ஊடகப் பிரிவைப் பெற்ற எஸ்பிஹெச் மீடியா நிறுவனம் 2020 செப்டம்பருக்கும் 2022 மார்ச்சுக்கும் இடைப்பட்ட காலத்தில் தனது உள் மறுஆய்வை நடத்தியது. செய்தித்தாள் விநியோகம் மிகைப்படுத்திக் காட்டப்பட்டது அந்த ஆய்வில் கண்டறியப்பட்டது.
எஸ்எம்டி நிறுவனத்துக்கு ஆண்டு ஒன்றுக்கு $180 மில்லியன் வரை ஐந்தாண்டுகளுக்கு நிதி ஆதரவு அளிக்கப்படும் என்றும் முன்னேற்றம் தொடர்பான அறிக்கையை அரையாண்டுக்கு ஒருமுறை வழங்குமாறு அந்நிறுவனம் கேட்டுக்கொள்ளப்படும் என்றும் முன்னதாக அமைச்சு கூறி இருந்தது.

