பேரதிர்ச்சி: பால் பண்ணை வெடிப்பில் 18,000 மாடுகள் மரணம்

பேரதிர்ச்சி: பால் பண்ணை வெடிப்பில் 18,000 மாடுகள் மரணம்

1 mins read
e2e05f00-71f3-4c32-acf8-f7ba0e70aa2a
வெடிப்பில் இறந்த 18,000 மாடுகளும், அந்தப் பண்ணையின் ஒட்டுமொத்த கால்நடை எண்ணிக்கையில் 90 விழுக்காடு பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. படம்: Castro County Emergency Management/FACEBOOK -
multi-img1 of 2

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தில் உள்ள பால் பண்ணை ஒன்றில் வெடிப்பு ஏற்பட்டதால் 18,000 மாடுகள் மாண்டுவிட்டன. இந்த எண்ணிக்கை, அமெரிக்காவில் தினமும் வதைக்கப்படும் மாடுகளில் கிட்டத்தட்ட மும்மடங்கு என்று 'யுஎஸ்ஏ டுடே' ஊடகத்தில் வெளியான அறிக்கையில் குறிப்பிடப்பட்டது.

இச்சம்பவம் திங்கட்கிழமை (ஏப்ரல் 10) 'சவுத் ஃபோர்க் டெய்ரி ஃபார்ம்' பால் பண்ணையில் நிகழ்ந்தது. அதற்கு ஆக அருகில் உள்ள டிமிட் நகரின் மேயர் ரோஜர் மலோன், இத்தனை மாடுகள் மாண்டது பெரும் அதிர்ச்சியைத் தருவதாகக் கூறினார். கருவி ஒன்றில் ஏற்பட்ட கோளாற்றால் வெடிப்பு ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

இச்சம்பவத்தில் பால் பண்ணை ஊழியர் ஒருவர் மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார். செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் இருந்தாலும், சீராக இருந்ததாகக் கூறப்பட்டது.

இச்சம்பவத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்பட்டதாகத் தகவல் வெளியாகவில்லை.

வெடிப்பில் இறந்த 18,000 மாடுகளும், அந்தப் பண்ணையின் ஒட்டுமொத்த கால்நடை எண்ணிக்கையில் 90 விழுக்காடு பங்கு வகித்ததாகக் கூறப்படுகிறது. ஒவ்வொரு மாட்டின் மதிப்பு ஏறக்குறைய US$2,000 (S$2,650).

அப்படிப் பார்த்தால், அந்தப் பண்ணைக்கு மில்லியன் கணக்கான டாலர் இழப்பு ஏற்பட்டதாகத் தெரிகிறது.

இச்சம்பவத்தால் பால் உற்பத்தி பாதிக்கப்படக்கூடும். அமெரிக்க மாநிலங்களில் பால் உற்பத்தியைப் பொறுத்தமட்டில், டெக்சஸ் நான்காவது இடம் வகிக்கிறது. அங்கு ஏறக்குறைய 625,000 மாடுகள் ஒவ்வோர் ஆண்டும் கிட்டத்தட்ட 7.5 பில்லியன் கிலோ பால் உற்பத்தி செய்கின்றன.