ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முழுமையான உத்திபூர்வ பங்காளித்துவத்தை வலுப்படுத்த 10 அம்சத் திட்டத்தை முன்வைத்தார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி.
ஆசியாவின் எதிர்காலத்திற்கு ஆசியான்-இந்தியா உறவு இன்றியமையாதது என்று கூறிய அவர், இரு தரப்புக்கும் இடையிலான வர்த்தகம் கடந்த 10 ஆண்டுகளில் இருமடங்குக்கு மேல் அதிகரித்து 130 பில்லியன் அமெரிக்க டாலராக இருப்பதைச் சுட்டினார்.
தென்கிழக்காசியாவின் 10 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட ஆசியான் வட்டார அமைப்பின் உச்சநிலை மாநாடு லாவோஸ் தலைநகர் வியந்தியனில் அக்டோபர் 9 முதல் 11ஆம் தேதி வரை நடைபெற்று வருகிறது.
இரண்டாம் நாளான அக்டோபர் 10ஆம் தேதி இதர பங்காளிகளுடனான கூட்டங்கள் நடைபெற்றன. அதில் நடைபெற்ற 21வது ஆசியான்-இந்தியா கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ‘தொடர்புத்திறனையும் மீள்திறனையும் மேம்படுத்துதல்’ எனும் இந்த ஆண்டுக்கான ஆசியானின் கருப்பொருளை ஒட்டிப் பேசினார்.
தற்போது இந்தியாவிலிருந்து ஏழு ஆசியான் நாடுகளுக்கு நேரடி விமானச் சேவை இயங்குவதாகவும் விரைவில் புருணையுடன் நேரடி விமானச் சேவை தொடங்கப்படும் என்றும் அவர் அறிவித்தார்.
21ஆம் நூற்றாண்டு ஆசியாவின் நூற்றாண்டு என்று குறிப்பிட்ட மோடி, உலகின் மற்ற பகுதிகளில் சண்டை, சச்சரவுகள் நடந்துவரும் வேளையில் ஆசியானுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவும் ஒருங்கிணைப்பும் பேச்சுவார்த்தைகளும் இணக்கங்களும் மிகவும் முக்கியமானவை என்று குறிப்பிட்டார்.
2025ஆம் ஆண்டை ஆசியான்-இந்தியா பயணத்துறை ஆண்டாகக் கொண்டாடுவது, இளையர் உச்சநிலை மாநாடு, தொழில்முனைப்பு விழா, ஹேக்கத்தான், இசை விழா, ஆசியான்-இந்தியா அறிவுசார் அமைப்புகளின் கட்டமைப்பு, டெல்லி கலந்துரையாடல் போன்ற திட்டங்களைத் திரு மோடி முன்வைத்தார்.
ஆசியான்-இந்தியா அறிவியல், தொழில்நுட்ப மேம்பாட்டு நிதியின்கீழ் ஆசியான்-இந்தியா மகளிர் அறிவியல் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்வது, ஆசியான் பட்டதாரிகளுக்கு முதுநிலைப் பட்டம் பயில நாலந்தா பல்கலைக்கழகத்தில் வழங்கப்படும் உபகாரச் சம்பளங்களை இரட்டிப்பாக்குவது, இந்தியாவின் வேளாண் துறையில் பட்டப்படிப்பு படிக்க ஆசியான் மாணவர்களுக்குப் புதிய உபகாரச் சம்பளம் எனக் கல்விசார் திட்டங்களையும் இளையர்களை முன்னிறுத்தும் திட்டங்களையும் பிரதமர் மோடி அறிவித்தார்.
தொடர்புடைய செய்திகள்
பேரிடர் நிவாரணத்தை மேம்படுத்துவது, சுகாதார மீள்திறனை மேம்படுத்தப் புதிய சுகாதார அமைச்சர்கள் தடம், மின்னிலக்க, இணைய மீள்திறனை வலுப்படுத்த தொடர்ச்சியான கலந்துரையாடல்கள் என மீள்திறனை மேம்படுத்தும் ஆசியானின் இலக்குகளுக்கு இந்தியாவின் ஆதரவை அவர் தெரிவித்தார்.
பசுமை ஹைட்ரோஜன் பயிலரங்குகளை ஏற்படுத்தும் திட்டத்தை முன்வைத்து பருவநிலை மீள்திறனை உருவாக்கும் ‘தாய்க்காக மரம் நடுவோம்’ திட்டத்தில் இணையுமாறு ஆசியான் தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்தார்.
தென்கிழக்காசிய வட்டாரத்தின் அமைதி, நிலைத்தன்மை, வளர்ச்சிக்காக ஆசியான்-இந்தியா உறவை வலுப்படுத்தவும் மின்னிலக்க உருமாற்றத்தை முன்னெடுக்கவும் ஆசியான் அமைப்புடன் இரு கூட்டறிக்கைகள் வெளியிடப்பட்டன.
ஆசியான்-இந்தியா கலந்துரையாடல்களின் ஒருங்கிணைப்பாளராக சிங்கப்பூர் 2021 முதல் 2024ஆம் ஆண்டு வரை பணியாற்றியது. அந்தக் காலகட்டத்தில் இருதரப்பு உறவுகள் மேம்படுத்தப்பட்டதைச் சுட்டிக்காட்டி சிங்கப்பூருக்கு நன்றி கூறினார் பிரதமர் மோடி. தற்போது அந்தப் பொறுப்பை பிலிப்பீன்ஸ் ஏற்றுக்கொண்டுள்ளது.
திரு மோடி, ஜப்பான், நியூசிலாந்துப் பிரதமர்களுடன் இருதரப்புச் சந்திப்புகளையும் நடத்தினார்.
ஜப்பானின் புதிய பிரதமராகப் பதவியேற்றுள்ள ஷிகெரு இஷிபாவைச் சந்தித்துப் பேசிய மோடி, வர்த்தகம், முதலீடு, உள்கட்டமைப்பு மேம்பாடு, தற்காப்பு, பாதுகாப்பு, பகுதி மின்கடத்தி, திறன்வளர்ச்சி, கலாசாரப் பரிமாற்றம் முதலிய அம்சங்களில் மேம்பட்ட ஒத்துழைப்பை வலுப்படுத்த கடப்பாடு கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, கல்வி, பால்துறை, வேளாண் தொழில்நுட்பம், விளையாட்டு, பயணத்துறை, விண்வெளி போன்ற அம்சங்களில் நியூசிலாந்துடனான இருதரப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்த நியூசிலாந்துப் பிரதமர் கிறிஸ்டஃபர் லுக்சோனும் பிரதமர் மோடியும் கலந்துரையாடினர்.