தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

தெங்காவில் 18,000க்கும் மேற்பட்ட வீவக வீடுகள் விற்பனை

1 mins read
09f51b0c-65e3-4b65-babb-8d789897a566
தெங்கா டிரைவில் அமையும் 'பிடிஓ' வீடுகள். கோப்புப்படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரின் புதிய நகரான தெங்காவில் 30,000 வீடமைப்பு வளர்ச்சிக் கழக வீடுகள் கட்டப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், இதுவரை 18,000க்கும் மேற்பட்ட வீடுகள் விற்பனைக்கு விடப்பட்டுள்ளன.

அங்கு 2018ஆம் ஆண்டில் முதன்முதலாக வீவக வீட்டு விற்பனை அறிமுகம் கண்டது.

சிங்கப்பூரின் மேற்குப் பகுதியில், 700 ஹெக்டர் பரப்பளவில், அதாவது கிட்டத்தட்ட பீஷான் அளவிற்கு அவ்வட்டாரம் அமைகிறது. 24வது வீவக குடியிருப்புப் பேட்டையான அது `வனநகர்' என்றும் குறிப்பிடப்படுகிறது.

தெங்காவில் இதுவரை 18 வீடமைப்புத் திட்டங்கள் மூலமாக தேவைக்கேற்ப கட்டித் தரப்படும் (பிடிஓ) 18,555 வீடுகளைக் கழகம் விற்பனைக்கு விட்டுள்ளது.

கடந்த நான்கு ஆண்டுகளாக தெங்காவில் வீடு வாங்க மக்கள் காட்டும் ஆர்வம் சீராக இருந்து வருவதாக 'ஆரஞ்ச்டீ அண்டு டை' நிறுவனத்தின் ஆய்வு, பகுப்பாய்வு மூத்த இயக்குநர் கிறிஸ்டின் சன் கூறினார்.

கடந்த 2021 நவம்பர் முதல் 2023 பிப்ரவரி வரை தெங்காவில் இடம்பெற்ற நான்கு வீட்டு விற்பனை நடவடிக்கைகளில் அங்கு வீடு வாங்க சராசரியாக 5,564 விண்ணப்பங்கள் வந்ததையும் முந்திய நான்கு நடவடிக்கைகளில் 3,138 விண்ணப்பங்கள் வந்ததையும் வீவக தரவுகள் காட்டுகின்றன.

எல்லாத் திட்டங்களும் நிறைவுபெற்றதும், வீவக வீடுகள் 30,000, தனியார் வீடுகள் 12,000 என தெங்காவில் ஏறக்குறைய 42,000 வீடுகள் இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.