மலேசியாவின் குடிநுழைவுத் துறை, கூட்ட நெரிசலைக் குறைக்க ஜோகூரிலும் கோலாலம்பூரிலும் நாட்டிற்குள் செல்வதற்கான முக்கிய நுழைவாயில்களில் கூடுதலான அதிகாரிகளைப் பணியமர்த்தும்.
இரண்டாம் இணைப்பில் உள்ள சுல்தான் அபு பக்கர் சுங்க, குடிநுழைவு வளாகம், ஜோகூர் கடற்பாலத்தில் உள்ள சுல்தான் இஸ்கந்தர் கட்டடம் உட்பட ஜோகூரில் உள்ள முக்கிய இடங்களில் 100 அதிகாரிகள் பணியமர்த்தப்படுவர் என்று உள்துறை அமைச்சர் சைஃபுடின் நசுஷன் இஸ்மாயில் ஞாயிற்றுக்கிழமை (மே 21) கூறியதாக பெர்னாமா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
திங்கட்கிழமையிலிருந்து மேலும் 100 அதிகாரிகள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் முதலாம், இரண்டாம் முனையங்களில் பணியமர்த்தப்படுவர் என்றார் அவர்.
முன்னதாக, அதிகாரிகளைப் பணியமர்த்துவதில் பற்றாக்குறை நிலவியதால், இந்த இடங்களில் அவர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என்று அவர் கூறினார்.
இதற்கிடையே, புத்ராஜெயா பாதுகாப்பு, கடப்பிதழ் பிரிவுக்கும் மலேசியக் குடிநுழைவுக் கழகத்திற்கும் கோலாலம்பூர், புத்ராஜெயா, சரவாக் குடிநுழைவுத் துறைகளுக்கும் 22 அதிகாரிகள் அனுப்பப்படுவார்கள் என்று பெர்னாமா தெரிவித்தது.
மலேசியாவில் 140 நுழைவாயில்கள் உள்ளதாகவும் முக்கிய நுழைவாயில்களில் கூட்ட நெரிசலைக் குறைக்க அரசாங்கம் உறுதியாக இருப்பதால், தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்பட்டதாகவும் திரு சைஃபுடின் கூறினார்.


