ஜூரோங் வெஸ்ட்டில் மோட்டார்சைக்கிள் - டாக்சி மோதல்; தேசிய சேவையாளர் காயம்

1 mins read
78cf4dfa-2fd0-401a-ae6e-eada700839ee
மோட்டார்சைக்கிளோட்டியின் உணவு விநியோகப் பையும் வாகனத்தின் பாகங்களும் சாலையில் சிதறிக் கிடந்ததைப் படங்கள் காட்டின. படம்: ஷின்மின் வாசகர் -

ஜூரோங் வெஸ்ட் வட்டாரத்தில் வியாழக்கிழமை விடிகாலை மோட்டார் சைக்கிளும் காரும் மோதிக்கொண்ட விபத்து நிகழ்ந்தது.

இதில் மோட்டார்சைக்கிளை ஓட்டிச் சென்ற 20 வயது தேசிய சேவையாளர் காயமடைந்தார். அவர் சுயநினைவற்ற நிலையில் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார்.

ஜூரோங் வெஸ்ட் அவென்யூ 1, புளோக் 424 அருகே விடிகாலை 5.15 மணியளவில் இவ்விபத்து நிகழ்ந்தது.

இவ்விபத்து தொடர்பில் 35 வயது டாக்சி ஓட்டுநர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்தது.

அந்த தேசிய சேவையாளர் சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையைச் சேர்ந்தவர் என்றும் விபத்து நிகழ்ந்தபோது அவர் பணியில் இருக்கவில்லை என்றும் கூறப்பட்டது.

அவரது மூக்கில் இருந்து இரத்தம் சொட்டியதையும் எலும்பு வெளியில் தெரியுமளவிற்குக் கணுக்கால்களிலும் பாதங்களிலும்

காயமடைந்திருந்ததையும் கண்டதாக அவ்வழியே சென்றவர்கள் கூறியதாக 'ஷின்மின்' சீன நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.

மோட்டார்சைக்கிளோட்டியின் உணவு விநியோகப் பையும் வாகனத்தின் பாகங்களும் சாலையில் சிதறிக் கிடப்பதைப் படங்கள் காட்டின.