தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

இந்தியாவில் தங்கக் கடத்தலுக்கு பெயர்போன விமான நிலையம்

2 mins read
148af7be-55fe-43fd-a60f-e9bd6ca4ed98
தங்கம் கடத்துவோருக்கு மும்பை பெரிய சந்தையாக விளங்குகிறது. படம்: ராய்ட்டர்ஸ் -

மும்பை அனைத்துலக விமான நிலையத்தில் கடந்த 11 மாதங்களில் மட்டும் 604 கிலோ கிராம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவற்றின் மதிப்பு ரூ.306 கோடி.

தங்கக் கடத்தலில் இந்தியாவின் ஆகப்பெரிய மையமாக மும்பை விமான நிலையம் திகழ்கிறது. அதற்கு அடுத்தடுத்த நிலைகளில் டெல்லி (374 கிலோ), சென்னை (306 கிலோ) விமான நிலையங்கள் வருகின்றன. சுங்கத்துறை வெளியிட்டுள்ள தகவலில் இது தெரிவிக்கப்பட்டது.

2022 ஏப்ரலுக்கும் இவ்வாண்டு பிப்ரவரிக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில் மும்பை விமான நிலையத்தில் கைப்பற்றப்பட்ட தங்கத்தின் அளவு, அதற்கு முந்திய ஆண்டில் (91 கிலோ) இருந்ததைவிட அதிகம்.

தங்கம் கடத்துவோருக்கு மும்பை பெரிய சந்தையாக விளங்குகிறது.

இந்தியாவின் மற்ற பெருநகர்களான டெல்லி, கோல்கத்தா, சென்னை ஆகியவையும் தங்கக் கடத்தலின் முக்கிய இடங்களாகத் திகழ்கின்றன.

தங்கக் கடத்தலுக்குத் தளமாக விளங்கும் நகர்களில் இப்போது ஹைதராபாத்தும் சேர்ந்துள்ளது. கடந்த ஆண்டு அங்கு 124 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. ஒப்புநோக்க, 2021ஆம் ஆண்டு அங்கு 55 கிலோ தங்கம் பிடிபட்டது.

2022 அக்டோபரில் இருந்து, தங்கம் கடத்தியதற்காக மும்பையில் 20க்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவுக்கு மொத்தம் 720 டன் தங்கம் வந்துசேர்வதாக நகைக்கடைக்காரர்கள் தெரிவித்தனர். அதில் 380 டன் தங்கம் சட்டபூர்வமாக வருகிறது. அதற்கு 15% இறக்குமதி வரியும் 3% ஒருங்கிணைந்த பொருள், சேவை வரியும் விதிக்கப்படுகிறது. எஞ்சிய 340 டன் தங்கம், இந்தியாவுக்குக் கடத்தி வரப்படுகிறது.

அதேவேளையில், ஆண்டுதோறும் ஏறக்குறைய 900 டன் தங்கம் இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படுவதாக உள்நாட்டு வருவாய்ச் சேவை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.