சிறந்த 'ஒரிஜினல்' பாடலுக்கான ஆஸ்கார் விருதை வென்று சாதித்தது 'ஆர்ஆர்ஆர்' படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல். இந்தப் பிரிவில் ஆஸ்கார் விருது வென்ற முதல் இந்தியத் திரைப்படப் பாடல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.
95வது ஆஸ்கார் விருதுகள் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சலிஸ் நகரில் சிங்கப்பூர் நேரப்படி திங்கட்கிழமை காலை (13-03-2023) இடம்பெற்றது.
இதில், கடந்த 2021ஆம் ஆண்டு ராஜமௌலி இயக்கத்தில் வெளியான 'ஆர்ஆர்ஆர்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'நாட்டு நாட்டு' பாடல் சிறந்த 'ஒரிஜினல்' பாடலுக்கான விருதுப் பிரிவில் இடம்பெற்றிருந்தது.
மூத்த இசையமைப்பாளர் எம்.எம்.கீரவாணி இசையில் உருவான இந்தப் பாடலுக்கு விருது வழங்கப்பட்டது. முன்னதாக மேடையில் ஒலித்த இப்பாடலுக்குக் கலைஞர்கள் நடனமாடினர்.
இந்தியத் திரை நட்சத்திரம் தீபிகா படுகோன் விழா மேடையில் தோன்றி இப்பாடலை அறிமுகப்படுத்தினார்.
கடந்த ஜனவரியில் 'கோல்டன் குளோப்' விருதையும் இப்பாடல் தட்டிச் சென்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, தமிழ்நாட்டின் நீலகிரி மாவட்டம், முதுமலையைச் சேர்ந்த ஒரு தம்பதியர் யானைகளைப் பராமரிப்பது குறித்த 'தி எலிஃபன்ட் விஸ்பரர்ஸ்' ஆவணப்படம், சிறந்த குறும்படப் பிரிவில் ஆஸ்கார் விருதைக் கைப்பற்றியது.