போலிசுக்கு புது அதிகாரங்கள் வழங்க சட்டத்தில் திருத்தம்

2 mins read
5338fe23-a9fe-4e1d-8f19-825cbee35ca2
தோ பா யோ வட்டாரத்தில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபடும் காவல் அதிகாரிகள். படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் (கோப்புப் படம்) -

உத்தேச போலிஸ் படை சட்டத் திருத்தத்தின்கீழ் போலிஸ் அதிகாரிகள் புதிய அதிகாரங்களைப் பெற உள்ளனர். மருத்துவ அவசரநிலை போன்ற வேளைகளில் மேலும் துடிப்புடன் செயல்பட அவர்களுக்கு அந்த அதிகாரங்கள் பயன்படும்.

மேலும், போலிசாரின் செயல்பாட்டுத் திறன்கள், சிக்கல் மிகுந்த சூழ்நிலைகளுக்கான தயார்நிலை போன்றவற்றை வலுப்படுத்தவும் இந்த மாற்றங்கள் கைகொடுக்கும் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

போலிஸ் படை திருத்த மசோதாவை முதல் வாசிப்புக்கு நாடாளுமன்றத்தில் அமைச்சு இன்று சமர்ப்பித்தபோது இந்த விவரங்கள் தெரியவந்தன.

மசோதா நிறைவேறிய பின்னர் சட்டம் புதுப்பிக்கப்படும். அதன் மூலம் போலிசார் புதிய அதிகாரங்களைப் பெறுவர்.

மரணமடைவதில் இருந்தும் காயமடைவதில் இருந்தும் பொதுமக்களைக் காக்க வீடுகள் போன்ற வளாகங்களுக்குள் அத்துமீறி நுழையும் அதிகாரமும் போலிசாருக்கு அப்போது கிடைக்கும்.

தற்போது அதுபோன்ற அத்துமீறிய நுழைவு சில குறிப்பிட்ட சூழ்நிலைகளில் கைது நடவடிக்கை மேற்கொள்ள இயலாத வகையில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது.

குற்றச்செயல் நிகழவில்லை என்று நம்புகிற சூழ்நிலையிலும் வீடு போன்ற வளாகங்களுக்குள் யாரேனும் துயரமிகுதியில் கதறினால்கூட போலிஸ் அதிகாரிகளால் உள்ளே நுழைய முடியாது.

அதேபோல சிறப்பு போலிஸ் படை அதிகாரிகளும் வழக்கமான போலிஸ் அதிகாரிகளுக்கு உரிய அதிகாரங்களைப் பெற உத்தேச சட்டத்திருத்தம் வழிவகுக்கும். தற்போது

சிறப்புப் போலிஸ் படை அதிகாரிகளால் புலன்விசாரணை மட்டுமே செய்ய முடியும்.

இதர செயல்திறன்மிக்க கண்காணிப்பு அதிகாரங்கள் தற்போது வழங்கப்படுவதில்லை. முழுநேர தேசிய சேவையாளர்களும் தயார் நிலை தேசிய சேவையாளர்களும் சிறப்பு போலிஸ் அதிகாரிகளுள் அடங்குவர்.

புதிய அதிகாரங்கள் வழங்கப் பட்ட பின்னர் சாலைத்தடுப்பு அமைத் தல், கூட்டங்களைக் கலைத்தல், குற்றங்கள் நடைபெறுமுன் தடுத்தல் போன்ற கடமைகளை இந்த அதி காரிகள் மேற்கொள்ள அனுமதிக்கப் படுவர்.

அதேபோல வர்த்தக விவகார அதிகாரிகளுக்கும் கூடுதல் அதிகாரங்களை வழங்க உத்தேசிக்கப்பட்டு உள்ளது. பொது அதிகாரிகளாகச் செயல்படும் அவர்களின் புலன் விசாரணை அதிகாரங்கள் தற்போது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளன. அவர்கள் சில சந்தர்ப்பங்களில் தங்களது கடமைகளை நிறைவேற்றுவதற்கான அதிகாரங்களுக்காக சீருடை அணிந்த சக அதிகாரிகளைச் சார்ந்து இருக்க வேண்டி உள்ளது.

உத்தேசச் சட்டத்திருத்தம் இவர்கள் தங்களது வேலையைத் திறம்படச் செய்யும் வகையில் கூடுதல் அதிகாரங்களை வழங்கும்.

குற்றவாளிகளைக் கைது செய்ய, தடுத்து வைக்க, தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட இவர்கள் அதிகாரம் பெறுவர். மேலும் சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் முன்னிலையாகும்படி கேட்டுக்கொள்ளும் அதிகாரமும் இவர்களுக்குக் கிடைக்கும்.

இருந்தபோதிலும், சிறப்பு போலிஸ் அதிகாரிகளும் வர்த்தக விவகாரப் பிரிவு அதிகாரிகளும் புதிய அதிகாரங்கள் தொடர்பான பயிற்சிகளை முடித்த பின்னரே அத்தகைய அதிகாரங்களை நிறைவேற்ற அனுமதிக்கப்படுவர்.

புதிய அதிகாரத்திற்குப் பொருத் தமற்றவர் என்று கருதப்படும்போது அவர்கள் கூடுதல் அதிகாரங்களை நிறைவேற்றாத வகையில் நிர்வாக ரீதியாகத் தடுக்கப்படுவர்.