வெலிங்டன்: பிரதமர் பதவியிலிருந்து விரைவில் விலகுவேன் என்றும் தேர்தலில் மீண்டும் போட்டியிடப் போவதில்லை என்றும் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டன் அறிவித்துள்ளார்.
பிப்ரவரி 7ஆம் தேதிக்குள் இவரது பதவிக்காலம் நிறைவுறும்.
தமது எதிர்காலம் குறித்து இன்னும் உறுதியாகத் திட்டமிடவில்லை என்ற திருவாட்டி ஆர்டன், ஆயினும் தம் குடும்பத்துடன் அதிக நேரம் செலவிடப்போவதாகவும் தெரிவித்துள்ளார்.
அடுத்த பொதுத் தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெறும் என்று தாம் நம்புவதாகவும் அவர் கூறினார்.
நியூசிலாந்தில் இவ்வாண்டு அக்டோபர் 14ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது.
இந்நிலையில், தொழிலாளர் கட்சியின் அடுத்த தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்கெடுப்பு வரும் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்படும் என்றும் திருவாட்டி ஆர்டன் தெரிவித்திருக்கிறார்.
கடந்த 2017ஆம் ஆண்டு தமது 37வது வயதில் நியூசிலாந்துப் பிரதமராகப் பொறுப்பேற்றார் திருவாட்டி ஆர்டன். இதன்மூலம், உலகில் ஆக இளம் வயதில் பிரதமராகப் பதவியேற்றவர் என்ற பெருமையை இவர் பெற்றார்.
பிரதமர் பொறுப்பிலிருந்து விலகினாலும் இடைத்தேர்தலைத் தவிர்ப்பதற்காக வரும் ஏப்ரல் மாதம் வரை திருவாட்டி ஆர்டன் நாடாளுமன்ற உறுப்பினராக நீடிப்பார்.
இதற்கிடையே, நியூசிலாந்து துணைப் பிரதமரும் நிதியமைச்சருமான கிரான்ட் ராபர்ட்சன், தொழிலாளர் கட்சியின் அடுத்த தலைவர் பதவிக்குத் தாம் போட்டியிடப் போவதில்லை என்று ஓர் அறிக்கை வழியாகத் தெரிவித்துள்ளார்.

