சிங்கப்பூரின் கொவிட்-19 சூழல் நிலைப்பட்டு வருகிறது என்றும் சீனப் புத்தாண்டு விடுமுறைக் காலத்தில் அன்றாட பாதிப்பு நிலவரம் குறைந்த அளவிலேயே இருந்தது என்றும் சுகாதார அமைச்சர் ஓங் யி காங் தெரிவித்துள்ளார்.
நீண்ட வாரயிறுதியின்போது கீழ்நிலை மூன்று இலக்க அளவில் இருந்த அன்றாட கொரோனா பாதிப்பு, கடந்த திங்கட்கிழமை 78ஆகக் குறைந்ததை திரு ஓங் சுட்டினார்.
கடந்த சில காலமாகவே அன்றாட கொவிட்-19 பாதிப்பு இரட்டை இலக்கமாக இருந்துவந்ததாக அவர் குறிப்பிட்டார்.
நீண்ட வாரயிறுதியின்போது கொவிட்-19 பரவல் அதிகரிக்கவில்லை என்றும் நேற்று வியாழக்கிழமை நிலவரப்படி, தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளோர் எண்ணிக்கை கிட்டத்தட்ட 500ஆக உயர்ந்துள்ளது என்றும் திரு ஓங் சொன்னார்.
ஆயினும், மருத்துவமனைகளின் அவசர சிகிச்சைப் பிரிவுகள் அவற்றைத் திறம்படச் சமாளித்து வருவதாகவும் அவர் கூறினார்.
இதுபோல் அன்றாட கொவிட்-19 பாதிப்பு குறித்து இனியும் அலசி ஆராய வேண்டியதில்லை என்பது தமக்குத் தெரியும் என்றாலும், சீனப் புத்தாண்டு விடுமுறையின்போது நிலைமையை அணுக்கமாகக் கண்காணித்ததாக அமைச்சர் ஓங் சொன்னார்
ஜூரோங் வெஸ்ட் ஸ்திரீட் 52ல் இன்று வெள்ளிக்கிழமை (27-01-2023) இடம்பெற்ற என்டியுசி ஹெல்த் ஜூரோங் ஸ்பிரிங் தாதிமை இல்லத்தின் அதிகாரபூர்வத் திறப்புவிழாவில் கலந்துகொண்டு பேசியபோது அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சீனா தனது எல்லைகளை மீண்டும் திறந்துவிட்டதால், அங்கு உயர்ந்துவரும் கொரோனா பாதிப்பு சிங்கப்பூரிலும் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று பலரும் கவலைப்பட்டதாக திரு ஓங் குறிப்பிட்டார்.
இப்போது வாரத்திற்கு 38 எனக் குறைந்த அளவு விமானங்களே சிங்கப்பூர்-சீனா இடையே இயக்கப்படுவதால், அங்கிருந்து வருபவர்கள் மூலம் பதிவாகும் கொவிட்-19 பாதிப்பு மிகக் குறைவாகவே உள்ளது என்று அவர் சொன்னார்.
கடந்த வாரம் சீனாவிலிருந்து வந்தோரில் ஒருவரும் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.

