அரை மணி நேரத்துக்கும் அதிகமான எம்ஆர்டி ரயில் சேவை இடையூறுச் சம்பவங்கள் 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு இரட்டிப்பாகியது.
இத்தகைய இடையூறுச் சம்பவங்கள் கடந்த ஆண்டில் ஏழு முறை நிகழ்ந்தன. கடந்த ஐந்து ஆண்டுகளில் இதுவே ஆக அதிகமான இடையூறுச் சம்பவங்கள் நிகழ்ந்த இரண்டாவது தடவை என்பது குறிப்பிடத்தக்கது.
இருப்பினும், ஒட்டுமொத்த ரயில் நம்பகத்தன்மை தொடர்ந்து உயர்வாக இருப்பதாக நிலப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது. ரயில் சேவைத் தாமதமும் குறைந்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.
நிலப் போக்குவரத்து ஆணையம் வெளியிட்ட அறிக்கையின்படி, சிங்கப்பூரின் எம்ஆர்டி ரயில்கள் பயணம் செய்த ஒவ்வொரு 2.09 மில்லியன் கிலோமீட்டருக்கு ஐந்து நிமிடங்களுக்கும் அதிகமான ஒரு சேவை இடையூறு ஏற்பட்டது.
இதன்மூலம் உலகிலேயே அதிக நம்பகத்தன்மை வாய்ந்த ரயில் சேவைகளில் சிங்கப்பூரின் எம்ஆர்டி ரயில் சேவையும் ஒன்று.
ஆகச் சிறந்த ரயில் சேவை வழங்கிய எம்ஆர்டி ரயில் பாதையாக புதிய டௌன்டவுன் ரயில் பாதை திகழ்கிறது. இந்த ரயில் பாதையை எஸ்பிஎஸ் டிரான்சிட் நிறுவனம் நடத்துகிறது.
எஸ்எம்ஆர்டி நிறுவனம் நடத்தும் வடக்கு-தெற்கு ரயில் பாதையில் அதிக சேவை இடையூறு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.
இருப்பினும், வடக்கு-தெற்கு ரயில் பாதையில் எம்ஆர்டி ரயில்கள் 1.6 கிலோமீட்டருக்கும் அதிகம் பயணம் செய்த பிறகே ஓர் இடையூறுச் சம்பவம் ஏற்பட்டது. ஆகப் புதிய தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திறக்கப்பட்டது. அதை எஸ்எம்ஆர்டி நிறுவனம் நடத்துகிறது.
ரயில் சேவை வழங்க தொடங்கியதிலிருந்து அப்பாதையில் பல இடையூறுகள் ஏற்பட்டுவிட்டன. ஆனால் அவை அறிக்கையில் சேர்த்துக்கொள்ளப்படவில்லை.
இதற்கிடையே, எல்ஆர்டி ரயில் சேவை இடையூறுகள் கடந்த ஆண்டு பாதி அளவு குறைந்தது. கடந்த ஆண்டில் வெறும் இரண்டு எல்ஆர்டி சேவை இடையூறுகள் ஏற்பட்டன. இவ்வாண்டின் முதல் காலாண்டில் ரயில் சேவை இடையூறுகளின் எண்ணிக்கை அதிகரித்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
ஜனவரி மாதத்திலிருந்து இம்மாதத் தொடக்கம் வரை தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் குறைந்தது நான்கு சேவை இடையூறுச் சம்பவங்கள் நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே காலகட்டத்தில் வடக்கு-தெற்கு ரயில் பாதையில் மூன்று ரயில் சேவை இடையூறுச் சம்பவங்கள் நிகழ்ந்தன.
கடந்த நான்கு மாதங்களில் தாம்சன்-ஈஸ்ட் கோஸ்ட் ரயில் பாதையில் ஐந்து சேவை இடையூறுகள் ஏற்பட்டதாக ராடின் மாஸ் தனித்தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மெல்வின் யோங் நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவற்றில் இரண்டு மென்பொருள் தொடர்பான பிரச்சினைகளால் ஏற்பட்டதாக அவர் கூறினார். அவற்றுக்குத் தீர்வு காணப்பட்டுவிட்டதாக திரு யோங் தெரிவித்தார். ஏனைய இடையூறுகள் குறைபாடுகள் உள்ள பாகங்களால் ஏற்பட்டதாகவும் அவை மாற்றப்பட்டுவிட்டதாகவும் அவர் கூறினார்.

