சிங்கப்பூரில் 386,000க்கும் மேற்பட்டோர் இருவகை திறன் கொண்ட தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுவிட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. சிங்கப்பூரில் இருவகை திறன் கொண்ட தடுப்பூசி கடந்த அக்டோபர் மாதம் நடுப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.
12 வயது அல்லது அதற்கும் மேற்பட்டவர்கள் நேற்று முதல் ஃபைசர்-கொமிர்னாட்டி இருவகை திறன் கொண்ட தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளலாம்.
இதற்கு முன்னதாக கடந்த அக்டோபர் மாதம் 14ஆம் தேதியிலிருந்து மொடர்னா இருவகை திறன் கொண்ட தடுப்பூசி மட்டும் போடப்பட்டது.
Sars-CoV-2 கிருமிவகைக்கும் ஓமிக்ரான் கிருமிவகைக்கும் எதிராக இருவகை திறன் கொண்ட தடுப்பூசி பாதுகாப்பு அளிக்கிறது.
இந்நிலையில், இன்னொரு வகை இருவகை திறன் கொண்ட தடுப்பூசியை அறிமுகப்படுத்தினால் கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள மேலும் பலரை அது ஊக்குவிக்கும் என்று சுகாதார அமைச்சர் ஓங் யி காங் செய்தியாளர்களிடம் கூறினார்.
பரிந்துரைக்கப்பட்டபடி கூடுதல் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத 70 வயது அல்லது அதற்கும் மேற்பட்டோரில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 10,000 பேரில் ஏறத்தாழ 70 பேர் மாண்டதை அவர் சுட்டினார்.
இந்த விகிதம் நாட்டின் மக்கள்தொகையுடன் ஒப்பிடப்பட்டது. கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு 10,000 பேரில் ஏறத்தாழ ஐந்து பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்படுகின்றனர் அல்லது மரணம் அடைவதாகத் தெரிவிக்கப்பட்டது.
தேவையான, ஆக அண்மைய தடுப்பூசியை மூத்தோருக்குப் போடுவதற்கு முன்னுரிமை தரப்படுவதாக திரு ஓங் கூறினார்.
தொடர்புடைய செய்திகள்
60 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட பத்தில் ஒன்பது பேருக்கு குறைந்தபட்ச பாதுகாப்பு இருப்பதாக இம்மாதம் 7ஆம் தேதியன்று சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
பத்தில் ஆறு பேர் அவர்களுக்குத் தேவையான, ஆக அண்மைய தடுப்பூசியைப் போட்டுக்கொண்டு விட்டதாக அமைச்சு கூறியது.
இருப்பினும், கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிரான குறைந்தபட்ச பாதுகாப்பைக் கிட்டத்தட்ட 40,000 மூத்தோர் இன்னும் பெற்றுக்கொள்ளவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.
சிங்கப்பூரில் கொவிட்-19 நெருக்கடிநிலை அமைதியான, சீரான நிலையில் இருப்பதாக அமைச்சர் ஓங் தெரிவித்தார்.
பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதாக அவர் கூறினார். எக்ஸ்பிபி அலையை அடுத்து, மருத்துவமனைகளுக்குச் செல்வோர் எண்ணிக்கை குறைவாக இருப்பதை அவர் சுட்டினார்.
நேற்று நண்பகல் நிலவரப்படி புதிதாகப் பாதிக்கப்பட்டோருக்கான ஒரு வார சராசரி எண்ணிக்கை 1,031ஆகப் பதிவானது.
கொவிட்-19 காரணமாக 101 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். அவர்களில் 11 பேருக்கு உயிர்வாயுக் கருவி பொருத்தப்பட்டது. ஆறு பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையே, புவியின் வடக்குப் பகுதியில் பனிக்காலமாக இருக்கிறது. பனிக்காலத்தின்போது கொவிட்-19 போன்ற கிருமிப் பரவல் அதிகரிக்கும் சாத்தியம் அதிகம் இருப்பதால் நிலைமை மோசமடையக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது.
அண்மையில் கொவிட்-19 கட்டுப்பாடுகளைச் சீனா தளர்த்தி இருப்பதும் அக்கறைக்குரியது எனத் தெரிவிக்கப்பட்டது.
கொவிட்-19 கிருமித்தொற்றுக்கு எதிராக சிங்கப்பூரின் மீள்திறன் வலிமைமிக்கது என்று திரு ஓங் கூறினார்.
ஓமிக்ரான் கிருமிவகைகள் காரணமாக இவ்வாண்டில் மட்டும் சிங்கப்பூரில் மூன்று கொவிட்-19 அலைகள் ஏற்பட்டுவிட்டதை அவர் சுட்டினார்.
சீனாவில் இதுவரை பாதிப்பு ஏற்படாத இடங்களில் கிருமி பரவினால் கொவிட்-19 கிருமி உருமாறும் சாத்தியம் இருப்பதாக அமைச்சர் ஓங் எச்சரிக்கை விடுத்தார். ஹோங் கா நார்த் சமூக மன்றத்தில் உள்ள நடமாடும் தடுப்பூசிக் குழுவை திரு ஓங் நேரில் சென்று பார்த்தார்.
குடியிருப்புப் பேட்டைகளுக்கு நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் மீண்டும் அனுப்பிவைக்கப்பட்டன. மூத்தோர் தடுப்பூசி போட்டுக்கொள்வதை எளிதாக்க இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அடுத்த மாதம் 12ஆம் தேதி வரை எட்டு வட்டாரங்களுக்கு நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் அனுப்பிவைக்கப்படும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்திருந்தது.
அவற்றில் சுவா சூ காங், கம்போங் சாய் சீ, தோ பாயோ சென்ட்ரல் ஆகிய வட்டாரங்களில் உள்ள சமூக நிலையங்களும் சமூக மன்றங்களும் அடங்கும்.
ஒவ்வோர் இடத்திலும் நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் மூன்று நாள்களுக்கு இருக்கும். அதன்பிறகு, வேறு இடங்களுக்கும் செல்லும். நடமாடும் தடுப்பூசிக் குழுக்கள் எந்தெந்த நாள்களில் எங்கு இருக்கும் என்பதைக் காட்டும் கால அட்டவணையை https://gowhere.gov.sg எனும் இணையப்பக்கத்துக்குச் சென்று பார்க்கலாம்.


