நான்கு மாடி உயரத்திலிருந்து கீழே விழுந்த ஊழியர் மரணம்

2 mins read
589d9c06-2983-48c5-b9dc-8148982ab157
சனிக்கிழமை (ஜனவரி 14) எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், வாட்டர்ஃபிராண்ட் அய்ல் கூட்டுரிமை புளோக்கின் முகப்பு. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

சிங்கப்பூரில் இந்த ஆண்டின் முதல் வேலையிட மரணம் வியாழக்கிழமை நிகழ்ந்தது.

பிடோக்கில் கூட்டுரிமை புளோக் ஒன்றின் முகப்புப் பகுதிக்குச் சாயம் பூசிக்கொண்டு இருந்த மியன்மாரைச் சேர்ந்த ஊழியர், நான்கு மாடி உயரத்தில் இருந்து கீழே விழுந்து மரணமடைந்துவிட்டார்.

அந்தச் சம்பவம் பற்றி கேட்டபோது, எண் 738 பிடோக் ரிசர்வோர் ரோடு முகவரியைக் கொண்ட வாட்டர்ஃபிராண்ட் அய்ல் கூட்டுரிமை புளோக்கில் பிற்பகல் சுமார் 3.50 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்ததாக மனித வள அமைச்சு தெரிவித்தது.

மரணமடைந்த 37 வயது ஊழியர், வேறு ஓர் ஊழியருடன் தொங்குசாரத்தில் நின்றபடி சாயம் பூசிக்கொண்டு இருந்தார்.

அப்போது கைக்கு எட்டாத பகுதிகளில் சாயம் பூச இருவரும் சாரத்தைவிட்டு வெளியே வந்து மேலே ஏறி கான்கிரீட் முனையில் நின்றுகொண்டு சாயம் அடித்தனர்.

அப்போது ஒருவர் கீழே விழுந்துவிட்டார்.

அந்த ஊழியர் ISOTeam C&P என்ற நிறுவனத்தில் வேலை பார்த்தார். கீழே விழுந்தவர் மாண்டுவிட்டதாக மருத்துவ அதிகாரி உறுதிப்படுத்தினார்.

விபத்து பற்றி அமைச்சு புலன் விசாரணை நடத்தி வருகிறது. தொங்கு சார வேலைகளையும் உயரத்தில் இருந்தபடி ஊழியர்கள் வேலைபார்க்கும் எல்லா வேலைகளையும் நிறுத்தும்படி அமைச்சு அந்த நிறுவனத்திற்கு உத்தரவிட்டுள்ளது.

புதிதாக வெளிநாட்டு ஊழியரை வேலையில் அமர்த்த முடியாதபடி அந்த நிறுவனத்திற்கு மூன்றுமாத காலத்திற்குத் தடை விதிக்கப்படும் என்று அமைச்சு தெரிவித்தது.

நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர், பாதுகாப்புக் குறைபாடுகளுக்கு நேரடியாக பொறுப்பு எடுத்துக்கொள்ள வேண்டும். அவற்றைச் சரிப்படுத்தும் பொறுப்பையும் அவர் ஏற்க வேண்டும்.