நாடாளுமன்றத்தில் நிழல் அமைச்சரவை அமைக்கும் அளவிற்கு பாட்டாளிக் கட்சிக்குப் போதிய எம்.பி.க்கள் இல்லை என்று அக்கட்சியின் தலைமைச் செயலாளர் பிரித்தம் சிங் தெரிவித்து இருக்கிறார்.
அதே வேளையில், சிங்கப்பூரர்களுக்கு முக்கியமான ஐந்து துறைகளில் கொள்கைகளை ஆராயும் விதமாக பாட்டாளிக் கட்சி தன்னைத்தானே ஒழுங்கமைக்கும் என்று திரு சிங் குறிப்பிட்டார்.
சுகாதாரம், மூப்படைதல் மற்றும் ஓய்வுக்காலத்திற்குப் போதுமான வளங்கள், வேலைகள், வர்த்தகங்கள் மற்றும் பொருளியல், கல்வி, ஏற்றத்தாழ்வு மற்றும் விலைவாசி, வீடமைப்பு, போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு, தேசிய நிலைத்தன்மை ஆகியவையே அவர் குறிப்பிட்ட ஐந்து துறைகள்.
நாடாளுமன்றத்தில் நேற்று அதிபர் உரை மீதான விவாதத்தின்போது, எதிர்க்கட்சித் தலைவராகத் தமது முதல் உரையை ஆற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இந்த நாடாளுமன்றத் தவணைக் காலத்தில் பாட்டாளிக் கட்சி எம்.பி.க்களின் திட்டங்களையும் அவர் விவரித்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் என்ற புதிய பொறுப்பில் தாம் அமர்த்தப்பட்டுள்ளதைப் பற்றிப் பேசுகையில், அது சிங்கப்பூர் அரசியலில் நிகழும் மாற்றங்களுக்கான ஓர் அறிகுறி என்று அவர் சொன்னார்.
"நானும் சக பாட்டாளிக் கட்சி எம்.பி.க்களும் இன்னும் கடுமையாக உழைக்க வேண்டும் என்பது எனது தனிப்பட்ட எதிர்பார்ப்பு. அரசாங்கத்தின் கொள்கைகளை விமர்சிப்பதற்குமுன் கடினமான கேள்விகளை எங்களுக்குள்ளாகவே நாங்கள் கேட்டுக்கொள்ள வேண்டும். அதில் முதன்மையானது, நாம் பொறுப்பில் இருந்தால் என்ன செய்வோம் என்பதுதான்," என்றார் திரு சிங்.
அதே நேரத்தில், எதிர்க்கட்சி எந்த அளவிற்குச் செயல்படும் என்பது அரசாங்கம் எவ்வளவு தகவல்களை வெளியிடுகிறது, அவற்றின் தரம் ஆகியவற்றை பொறுத்தும் அமையும் என்று அவர் வலியுறுத்திக் கூறினார்.
பொதுவாக, சிங்கப்பூர் அரசியலில் பாட்டாளிக் கட்சியும் மற்ற எதிர்க்கட்சிகளும் ஆக்ககரமாகப் பங்களிக்க வேண்டும் என சிங்கப்பூரர்கள் எதிர்பார்ப்பதாக அவர் சொன்னார்.
எதிர்க்கட்சியாக இருக்கும்பொழுது அதிபருக்கும் நாட்டிற்கும் மக்களுக்கும் விசுவாசமாக நடந்துகொள்ளக் கடமைப்பட்டுள்ளோம் என்பதுதான் எப்போதுமே பாட்டாளிக் கட்சியின் நிலைப்பாடாக இருந்து வருகிறது என்றும் திரு சிங் தெரிவித்தார்.
வர்த்தக நாடு என்ற வரலாற்றுச்சிறப்புமிக்க நிலை, தற்காப்பு, வெளியுறவுக் கொள்கைகளில் சிங்கப்பூரின் நிலை, பல்லினக் கலாசாரம், ஊழல் வெறுப்பு போன்ற உயர்ந்த நெறிகள் உள்ளிட்ட சில விஷயங்கள் ஒருபோதும் மாறக்கூடாது என்றும் தமது 33 நிமிட உரையின்போது அவர் குறிப்பிட்டார்.
'பாதி நிரம்பிய, பாதி நிரப்பப்பட வேண்டிய கண்ணாடிக் குவளை' என சிங்கப்பூரைக் குறிப்பிட்ட திரு சிங், மாற வேண்டிய சில விஷயங்களையும் முன்வைத்தார்.
பிளவை ஏற்படுத்தவல்ல குறிப்பிட்ட சில விஷயங்களைக் கையாள்வதற்காக அமைக்கப்படும் தெரிவுக்குழுக்கள், நாட்டின் பொருளியலில் வெளிநாட்டினருக்கு அளித்து வரும் நிலையில் மாற்றம் போன்றவை அவர் குறிப்பிட்ட மாற வேண்டிய விஷயங்களில் சில.

