தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

சவாலான சூழலில் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிசெய்வோம்: பிரதமர் வோங்

3 mins read
ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிசெய்ய முன்னுரிமை 
11ada278-7c4b-4057-84e0-15d623a754cc
பொதுத் தேர்தல் 2025க்கான மக்கள் செயல் கட்சியின் தேர்தல் அறிக்கையைக் கட்சியின் தலைமைச் செயலாளரும் பிரதமருமான லாரன்ஸ் வோங், வியாழக்கிழமை (ஏப்ரல் 17) வெளியிட்டார். - படம்: இளவரசி ஸ்டீஃபன்

எதிர்வரும் பொதுத் தேர்தல் சிங்கப்பூரின் 60வது சுதந்திர தின ஆண்டில் ஒரு முக்கியமான தருணத்தில் இடம்பெறவிருக்கிறது என்று பிரதமர் லாரன்ஸ் வோங் வியாழக்கிழமை (ஏப்ரல் 17) கூறியுள்ளார்.

மக்கள் செயல் கட்சியின் (மசெக) தேர்தல் அறிக்கை வெளியீட்டு நிகழ்ச்சியில் பேசிய அவர், சிங்கப்பூரர்கள் செய்வதற்கு இன்னும் அதிகம் இருக்கிறது என்றார். குறிப்பாகச் சமூக இணக்கத்தை வலுப்படுத்துதல், சிங்கப்பூரர் எனும் கனவைப் புதுப்பித்தல், ஒவ்வொரு சிங்கப்பூரரும் அவரது சிறந்த தன்மையை வெளிப்படுத்த வழியமைக்கும் எதிர்காலத்தை அமைத்தல் ஆகியவற்றை அவர் வலியுறுத்தினார்.

“இதனால்தான் பொதுத் தேர்தலை இப்போது அறிவித்துள்ளேன். இந்த அதிமுக்கிய தறுவாயில் சிங்கப்பூரர்கள் நாட்டை நன்றாக வழிநடத்திச் செல்லக்கூடிய குழுவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்,” என்றார் அவர்.

பிரதமராகப் பதவியேற்று ஓராண்டு ஆகியுள்ள நிலையில், மக்கள் செயல் கட்சியின் தலைமைச் செயலாளருமான திரு வோங், சிங்கப்பூர் எதிர்கொண்ட ஒவ்வோர் இக்கட்டான சூழ்நிலையையும் சிறப்பாகக் கடந்துவந்ததில் மசெக, சிங்கப்பூரர்களுடன் தோளோடு தோள் நின்றது என்றார்.

செயற்கை நுண்ணறிவு போன்ற தொழில்நுட்ப மேம்பாடு, மூப்படையும் மக்கள்தொகை போன்ற சவால்கள் எழுந்தாலும் அத்தகைய ஒவ்வொன்றையும் கடந்துசெல்ல முன்னேறும் சிங்கப்பூர்த் திட்டம் கைகொடுக்கும்.

இது எளிதான பாதையன்று என்றும் உலகம் தற்போது ஆழமான மாற்றத்தை நோக்கிச் செல்வதால் சிங்கப்பூர் போன்ற சிறிய நாடுகளுக்கு இது நிச்சயமற்றதாக இருக்கும் என்றும் சொன்ன நிதி அமைச்சருமான திரு வோங், தமது கட்சியின் தேர்தல் அறிக்கை மாறிவரும் உலகம், புதிய அணி, மாறாத உறுதி ஆகிய அம்சங்களில் கவனம் செலுத்தும் எனக் குறிப்பிட்டார்.

‘உங்களுக்காக மேலும் ஒளிமயமான எதிர்காலத்தை உறுதிசெய்வோம்’ எனும் முழக்கவரியைக் கொண்ட தேர்தல் அறிக்கையை முன்வைத்த திரு வோங், அமெரிக்க வரி விதிப்பு உலகைப் புரட்டிப்போடும் வேளையில் தொழில்களுக்குப் பெரும் சவாலை விடுப்பதாகச் சொன்னார்.

“சிங்கப்பூர்ப் பொருளியல் பாதிக்கக்கூடும். வர்த்தக, தொழில்துறை அமைச்சு வளர்ச்சி முன்னுரைப்பைக் குறைத்துள்ளது. சிங்கப்பூர் எதிர்கொள்ளும் உலகளாவிய சூழல் நமது முக்கிய அக்கறையாக இருக்கிறது. இந்தக் கொந்தளிப்பான நேரத்தில் நாம் எவ்வாறு பயணம் செய்கிறோம் என்பது நமது மற்றும் நமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும்,” என்று பிரதமர் தெரிவித்தார்.

அமெரிக்கா வரிவிதிப்பு பற்றி மேலும் விளக்கிய திரு வோங் தொழில்கள் பல பதற்றநிலையில் இருப்பதாகவும் பலர் அவர்களின் முதலீடுகளைத் தடுத்து நிறுத்தலாம் என்றும் சொன்னார்.

“அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையில் இருக்கும் பதற்றம் தொடர்ந்து அதிகரிக்கும். இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு எவ்வாறு இருக்கும் என்று யாருக்கும் தெரியாது,” என்று பிரதமர் வோங் கூறினார்.

சிங்கப்பூரும் சிங்கப்பூரர்களின் எதிர்காலமும் சூதாடப்படமாட்டாது என்று உறுதியளித்த அவர், சிறந்த குழுவை அமைப்பதும் தமது முக்கிய முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்று விளக்கினார்.

“நம் குழு மிகச் சிறப்பாகச் செயல்படுகிறது. அனுபவம் வாய்ந்தவர்கள் தொடர்ந்து பங்களித்து வழிகாட்டி வருவார்கள். இருந்தாலும் என் குழுவைப் புதுப்பிப்பது என் கடமை,” என்று சொன்னார் திரு வோங்.

சேவை செய்ய சிறந்த மனம் படைத்தவர்கள் கொண்டுவரப்பட வேண்டும் என்ற பிரதமர், அவர்கள் மக்கள் செயல் கட்சியை வலுப்படுத்தப் புதிய சிந்தனைகளைக் கொண்டுவருவார்கள் என்றார்.

“நம் குழுவைப் புதுப்பிக்கக் கடுமையாக உழைப்பேன். அப்போதுதான் நாம் எதிர்காலத்துக்குத் தயாராக இருக்க முடியும்,” என்று திரு வோங் கூறினார்.

“வேட்பாளர்கள் எந்தக் குழுத்தொகுதியில் நின்றாலும் இந்தப் பொதுத் தேர்தல் கடினமாகத்தான் இருக்கும். மக்கள் செயல் கட்சி இவ்வளவு ஆண்டுகாலம் ஆட்சி செய்து வருவதால் அது கண்டிப்பாகத் தேர்தலில் வெற்றியடையும் என்று சொல்லிவிட முடியாது,” என்று திரு வோங் எச்சரித்தார்.

தேர்தல் அறிக்கையில் உள்ள மாறாத உறுதி அம்சத்தைப் பற்றிப் பேசிய திரு வோங், இந்த எஸ்ஜி60 பொதுத் தேர்தலில் மக்கள் செயல் கட்சி எந்தச் சவாலையும் கையாளத் தயார் என்றார்.

வரும் புதன்கிழமை (ஏப்ரல் 23) பொதுத் தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தினம்.

“மக்கள் செயல் கட்சி அதன் விழுமியங்களான நாணயத்தன்மை, வாழ்நாள் முழுவதும் திறமைக்கு முன்னுரிமை அளிக்கும் தன்மை, பல இனவாதம், நீதிமுறை, சமத்துவம் ஆகியவற்றுக்கு உண்மையாக இருக்கும்,” என்று பிரதமர் வோங் உரையின் முடிவில் குறிப்பிட்டார்.

“மாஜுலா சிங்கப்பூரா! மாஜுலா பிஏபி,” என்ற ஆரவாரத்துடன் பிரதமரும், மக்கள் செயல் கட்சி உறுப்பினர்களும் முழங்கத் திரு வோங் தமது உரையை முடித்தார்.

குறிப்புச் சொற்கள்