சிங்கப்பூரில் இங்குதான் பிராட்டா விலை குறைவு!

2 mins read
4d452e77-3199-40be-bf5e-1ff98c97eb8c
சிங்கப்பூரின் மேற்கு வட்டாரத்தில்தான் பிராட்டா விலை குறைவு என்று கொள்கை ஆய்வுக் கழக அறிக்கை தெரிவிக்கிறது. கோப்புப்படம் -

சிங்கப்பூரில் தனிநபர், குடும்ப வருமான அதிகரிப்பிற்கு ஏற்ப வெளியில் சென்று உணவருந்துவதற்கான செலவும் தொடர்ந்து உயரலாம்.

உணவு விலைகள் தொடர்பாக கொள்கை ஆய்வுக் கழகம் (ஐபிஎஸ்) இன்று திங்கட்கிழமை (13-03-2023) வெளியிட்ட அறிக்கை இதனைத் தெரிவித்துள்ளது.

உணவங்காடி நிலையங்கள் (hawker centre), கோப்பித்தியாம், உணவுக்கடைத் தொகுதிகள் (foodcourt) ஆகியவற்றில் கடந்த 2022 செப்டம்பர்-நவம்பர், 2023 ஜனவரி-பிப்ரவரி காலகட்டங்களில் உணவுவகைகளின் விலைகள் குறித்துத் திரட்டிய தரவுகளின் அடிப்படையில் இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

வெவ்வேறு வட்டாரங்களிலும் திரட்டிய ஒட்டுமொத்த தரவுகளையும் ஒப்பிட்டுப் பார்த்தபோது, 18ல் ஒன்பது உணவு, பானங்களின் விலைகளில் வேறுபாடு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

மத்திய வட்டாரத்தில் பானங்களும் 'சிக்கன் சாப்'பும் விலை குறைவாக இருந்தன.

காயா டோஸ்ட், இரண்டு அரைவேக்காட்டு முட்டைகள், காப்பி அல்லது தேநீர் ஆகியவை அடங்கிய காலை உணவுத்தொகுப்பும் ஃபிஷ்பால் நூடல்சும் வடக்கு வட்டாரத்தில் விலை குறைவாக விற்கப்படுகின்றன.

அதுபோல, மேற்கு வட்டாரத்தில்தான் பிராட்டாவின் விலை குறைவாக இருக்கிறது. அங்கு, ஒரு பிளைன் பிராட்டா, ஒரு முட்டை பிராட்டா என இரண்டு பிராட்டா சராசரியாக 2.97 வெள்ளிக்கு விற்கப்படுகின்றன. அதே நேரத்தில், 7.58 வெள்ளி என அங்குதான் சிக்கன் சாப்பின் விலை ஆக அதிகம்.

பொதுவாக, உணவுக்கடைத் தொகுதிகளில்தான் விலை அதிகம். அதனைத் தொடர்ந்து, கோப்பித்தியாமும் உணவங்காடி நிலையங்களும் வருகின்றன.

காலை உணவு (பிரேக்ஃபாஸ்ட் செட்) மற்றும் சைவ 'பீஹூன் செட்'டின் விலை உணவங்காடி நிலையங்களில்தான் குறைவு.

அதே நேரத்தில், உணவங்காடி நிலையங்கள் மற்றும் உணவுக்கடைத் தொகுதிகளைக் காட்டிலும் கோப்பித்தியத்தில்தான் கோழிச்சோறு விலை குறைவாக விற்கப்படுகிறது.

சராசரியாக, காலை உணவிற்கு $4.81, நண்பகல் உணவிற்கு $6.01, இரவு உணவிற்கு $6.20 செலவாகிறது.

உணவங்காடி நிலையங்கள், உணவுக்கடைத் தொகுதிகள், கோப்பித்தியாம் ஆகிய இடங்களில் ஒரு நாளில் மூன்று வேளை உணவிற்கும் சேர்த்து சராசரியாக $16.89 செலவாகிறது என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது.

இதன்படி, ஒருவர் மாதத்தின் 30 நாள்களும் மூன்று வேளையும் வெளியில் சாப்பிட சராசரியாக 506.70 செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது.