'பொங்கலோ பொங்கல்' என்று பிரதமர் லீ சியன் லூங் பொங்கல் திருநாள் வாழ்த்து தெரிவித்து இருக்கிறார்.
இன்று முதல் அடுத்த நான்கு நாள்களுக்குப் பொங்கல் திருநாளை தமிழர்கள் பலரும் சிறப்பாகக் கொண்டாடுகிறார்கள்.
இந்தப் பாரம்பரிய அறுவடைத் திருவிழா தமிழ்நாட்டில் தொடங்கியது. அறுவடை செழிக்க உதவும் சூரிய பகவானுக்கும் விவசாயிகளுக்குப் பெரிதும் உதவும் கால்நடைகளுக்கும் நன்றி கூறும் வகையில் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுகிறது.
சிங்கப்பூரில் இந்த வார முடிவில் இந்திய மரபுடைமை நிலையம் பொங்கல் பொது வரவேற்பு நிகழ்ச்சியை நடத்துகிறது. பொங்கல் பண்டிகைக்கு வேளாண்மை அடிப்படை என்பதை அந்த நிகழ்ச்சி எடுத்துக்காட்டும்.
பொங்கல் பற்றி தெரிந்துகொள்ள ஏராளமான தகவல்கள் அங்கு இருக்கும். https://www.indianheritage.gov.sg/pongalo-pongal/index.html என்ற முகவரியில் மேலும் பல விவரங்களைப் பெறலாம் என்று ஃபேஸ்புக்கில் பிரதமர் தெரிவித்து இருக்கிறார்.
இந்தப் பண்டிகைக் காலத்தில் செழிப்பும் மங்கலமும் அளவின்றிப் பொங்கி வழியட்டும் என்று வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ள பிரதமர் லீ, இந்திய மரபுடைமை நிலையப் பொது வரவேற்பு நிகழ்ச்சியில் இடம்பெற்ற கலைநிகழ்ச்சியைக் காட்டும் படத்தையும் வெளியிட்டுள்ளார்.

