தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

பொருளியல் ஒருங்கிணைப்பை விரைவுபடுத்த பிரதமர் வலியுறுத்து

2 mins read
32f58ab4-abd3-4f48-8fab-18f7ad2f2ceb
44வது, 45வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சி அக்டோபர் 9ஆம் தேதி லாவோஸ் தலைநகர் வியந்தியனில் நடைபெற்றது. அந்த நிகழ்ச்சியில் உறுப்பு நாடுகளின் தலைவர்கள் ஆசியானின் ஒற்றுமையைப் பறைசாற்றும் வண்ணம் கைகோத்து நின்றனர். படத்தில் இடமிருந்து மூன்றாவதாக சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங். - படம்: எஸ்பிஎச் மீடியா

ஆசியான் வட்டார அமைப்பின் இலக்குகள் கைகூட பொருளியல் ஒருங்கிணைப்பை விரைவுபடுத்தவேண்டும் என்றும் குறிப்பாக மின்னிலக்கப் பொருளியல், பசுமைப் பொருளியல் என்ற இரு புதிய துறைகளில் முயற்சிகளை முடுக்கிவிடவேண்டும் என்றும் பிரதமர் லாரன்ஸ் வோங் வலியுறுத்தியுள்ளார்.

புதிய வாய்ப்புகளைக் கைவசப்படுத்தும் ஆற்றலை வெளிக்காட்டுவதுடன் ஒரே அமைப்பாக ஆசியானின் நம்பகத்தன்மையையும் ஒற்றுமையையும் மேம்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

பிரதமராகப் பதவியேற்றபின் கலந்துகொள்ளும் முதல் ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பேசிய திரு வோங், தென்கிழக்காசிய வட்டாரத்தின் அமைதிக்கும் நிலைத்தன்மைக்கும் வளர்ச்சிக்கும் ஆசியான் முக்கியப் பங்கு வகித்துள்ளது என்று சொன்னார்.

லாவோஸ் தலைநகர் வியந்தியனில் அக்டோபர் 9 முதல் 11ஆம் தேதி நடைபெறும் 44வது, 45வது ஆசியான் உச்சநிலை மாநாட்டிலும் அதன் தொடர்பான கூட்டங்களிலும் கலந்துகொள்ளும் பிரதமர், ஆசியானின் இலக்குகள், வாய்ப்புகள், பங்காளித்துவ நாடுகளுடனான உறவு போன்றவற்றைக் குறிப்பிட்டுப் பேசினார்.

புதன்கிழமை (அக்டோபர் 9) காலை நடைபெற்ற ஆசியான் உச்சநிலை மாநாட்டின் தொடக்க நிகழ்ச்சி வியந்தியனின் தேசிய மாநாட்டு மையத்தில் நடைபெற்றது. ஆசியான் தலைமைத்துவ நாடான லாவோசின் பிரதமர் சொனக்சே சிபண்டோன் உரையாற்றினார். அதன்பிறகு 44வது ஆசியான் உச்சநிலை மாநாட்டின் கலந்துரையாடல் கூட்டம் அதே வளாகத்தில் இடம்பெற்றது.

அதற்குப் பின்னர் நடைபெற்ற 45வது உச்சநிலை மாநாட்டிற்குமுன் தாய்லாந்துப் பிரதமராகப் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள பேடோங்டார்ன் ஷினவாத்தைச் சந்தித்துப் பேசினார் பிரதமர். முதன்முறையாக நேரடியாகச் சந்திக்கும் இருதலைவர்களும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த நம்பிக்கை கொண்டனர். வியட்னாம், மலேசிய நாட்டுத் தலைவர்களுடனும் திரு வோங் இருதரப்புச் சந்திப்புகளை நடத்தினார்.

அடுத்த ஆண்டுக்குள் வரையப்படவுள்ள ஆசியான் மின்னிலக்கப் பொருளியல் கட்டமைப்பு ஒப்பந்தம் ஆசியான் நாடுகளின் சிறிய, நடுத்தர நிறுவனங்களுக்கு முதன்மையான உந்துசக்தியாக அமையும் என்று நம்பிக்கை அளித்தார்.

புதிய மின்னிலக்கத் தொழில்நுட்பங்களைக் கொண்டுவருவதுடன் அவற்றால் ஏற்படும் அபாயங்களையும் கையாளவேண்டும் என்றார் அவர்.

செயற்கை நுண்ணறிவு குறித்தும் இணையப் பாதுகாப்பை வலுப்படுத்துவது குறித்தும் சுட்டிக்காட்டிய பிரதமர், சிங்கப்பூரிலுள்ள ஆசியான் வட்டாரக் கணினி அவசர அழைப்புக் குழுவிற்கு ஆசியான் தலைவர்கள் நல்கிய ஆதரவுக்கு நன்றி தெரிவித்துக்கொண்டார்.

ஆசியான் நாடுகள் வளர்ச்சி அடையவேண்டும், இருப்பினும், முன்பிருந்ததைவிட குறைவான கரியமிலவாயு வெளியேற்றத்துடன் வளர்ச்சி அடையவேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார் திரு வோங்.

ஆசியான் ‘பவர் கிரிட்’ எனப்படும் எரிசக்திக் கட்டமைப்பை 2045க்குள் நடைமுறைப்படுத்த ஆசியான் நாட்டின் எரிசக்தி துறை அமைச்சர்கள் இணக்கம் கண்டுள்ளனர்.

எல்லைத் தாண்டிய எரிசக்திப் பரிமாற்றத்தை அடைய, தெளிவான சட்ட திட்டங்களும் பொருளியல் கட்டமைப்புகளும் இருக்கவேண்டும் எனப் பிரதமர் வோங் சுட்டினார்.

உலக வங்கியும் ஆசிய மேம்பாட்டு வங்கியும் இந்தக் கட்டமைப்பு குறித்து ஆர்வம் காட்டுவதால் இந்த முக்கியத் திட்டத்திற்கான நிதியாதரவைப் பெற்று வாய்ப்புகளை அரவணைத்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

குறிப்புச் சொற்கள்