லாவோஸ் தலைநகர் வியந்தியனில் நடைபெறும் 44வது, 45வது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் பிரதமர் லாரன்ஸ் வோங் கலந்துகொள்கிறார். அதனுடன், லாவோசுக்கான அதிகாரத்துவப் பயணத்தையும் அவர் மேற்கொள்கிறார்.
சிங்கப்பூர் பேராளர் குழுவை வழிநடத்தி அக்டோபர் 9 முதல் 12 வரை லாவோஸ் செல்லும் திரு வோங், பிரதமராகப் பதவியேற்ற பிறகு கலந்துகொள்ளும் முதல் ஆசியான் உச்சநிலை மாநாடு இது.
இவ்வாண்டின் ஆசியான் தலைமைத்துவத்தை ஏற்றுள்ள லாவோஸ், ‘தொடர்புத்திறனையும் மீள்திறனையும் மேம்படுத்துதல்’ எனும் கருப்பொருளைக் கொண்டுள்ளது.
தென்கிழக்காசிய வட்டாரத்தின் அரசியல் சூழல், பொருளியல் சவால்களின் பின்னணியில் ஆசியானின் ஒற்றுமையையும் மீள்திறனையும் மேம்படுத்தும் ஆக்ககரமான, முன்னோக்கிய திட்டத்தை அந்தக் கருப்பொருள் கோடிட்டுக் காட்டுகிறது.
ஆசியான் வட்டார அமைப்பின் 10 உறுப்பு நாடுகளின் தலைவர்களும் புதிய உறுப்பு நாடாக சேரும் சாத்தியமுடைய தீமோர் லெஸ்டேவின் தலைவரும் இந்த உச்சநிலை மாநாட்டில் கலந்துகொள்வார்கள். இருப்பினும், மியன்மாரின் ஆளும் ராணுவத் தலைவர்களுக்கு இந்த அதிகாரத்துவ கூட்டங்களில் பங்கெடுக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் அந்நாட்டின் அரசியல் பிரதிநிதியாக ஒருவர் அனுப்பிவைக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசியானின் சமூக மேம்பாட்டுத் திட்டங்களை மறுஆய்வு செய்வதுடன் இவ்வட்டாரத்தில் மக்களுக்கும் வர்த்தகங்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழிகள் குறித்தும் தலைவர்கள் கலந்தாலோசிப்பர். குறிப்பாக வளரும் துறைகளான மின்னிலக்க, பசுமைப் பொருளியலில் கவனம் செலுத்தப்படும்.
திறந்த, அனைவரையும் உள்ளடக்கிய, நிலையான வட்டார கட்டமைப்பாக ஆசியானின் பணியை வலுப்படுத்தும் கலந்துரையாடலும் இடம்பெறும்.
27வது ஆசியான் ‘பிளஸ் 3’ உச்சநிலை மாநாடு, 19வது கிழக்காசிய உச்சநிலை மாநாடு, ஆஸ்திரேலியா, கனடா, சீனா, இந்தியா, ஜப்பான், தென்கொரியா, ஐக்கிய நாடுகள் சபை, அமெரிக்கா ஆகியோருடனான தனித்தனி உச்சநிலை மாநாடுகளும் இந்தப் பயணத்தின்போது நடைபெறுகின்றன. அவற்றில் கலந்துகொள்ளும் பிரதமர் வோங், தமது சகாக்களுடன் இந்த வெவ்வேறு உலகத் தலைவர்களுடன் ஆசியானின் தொடர்புகளை விரிவுபடுத்துவது குறித்து கலந்தாலோசிக்க உள்ளனர்.
தொடர்புடைய செய்திகள்
ஜப்பானின் புதிய பிரதமர் ஷிகெரு இஷிபா, தாய்லாந்து பிரதமர் பேடோங்டார்ன் ஷினவாத் போன்ற தலைவர்களுக்கும் இந்த உச்சநிலை மாநாடு முதல் முறையாக இருக்கும்.
உச்சநிலை மாநாடுகளுக்குப் பின்னர், பிரதமர் லாரன்ஸ் வோங், லாவோஸ் பிரதமர் சொனக்சே சிஃபண்டோனுடன் இருதரப்புச் சந்திப்புகளை நடத்துகிறார்.
பிரதமருக்கும் சிங்கப்பூர் பேராளர்களுக்கும் லாவோஸ் பிரதமர் அக்டோபர் 11ஆம் தேதி அதிகாரத்துவ விருந்தளிக்கிறார்.
அக்டோபர் 12ஆம் தேதி லாவோஸ் அதிபர் தொங்லூன் சிசொலித்தை பிரதமர் வோங்கும் பேராளர்களும் சந்திக்கின்றனர்.
சிங்கப்பூருக்கும் லாவோசுக்கும் இடையிலான அரசதந்திர உறவு 1974ஆம் ஆண்டு தொடங்கியது. இந்த ஆண்டு இருதரப்பு உறவுகளின் 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வண்ணம் பிரதமர் வோங்கின் அதிகாரத்துவப் பயணம் அமைகிறது.
கடந்த ஜூலை மாதம் வாவோஸ் பிரதமர் சிங்கப்பூருக்கு அதிகாரத்துவப் பயணம் மேற்கொண்டு அதிபர் தர்மன் சண்முகரத்னம், பிரதமர் வோங், மூத்த அமைச்சர் லீ சியன் லூங் ஆகியோரைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் வோங்குடன் அவருடைய துணைவியாரும் வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணனும் லாவோஸ் செல்கின்றனர்.
இந்தக் காலகட்டத்தில் துணைப் பிரதமரும் வர்த்தக, தொழில் அமைச்சருமான கான் கிம் யோங் இடைக்கால பிரதமராகப் பொறுப்பு வகிப்பார் என அக்டோபர் 8ஆம் தேதி வெளியிடப்பட்ட பிரதமர் அலுவலக அறிக்கை குறிப்பிட்டது.