மியன்மாரில் மோசமடைந்துவரும் சண்டையை நிறுத்தவும் மனிதநேய உதவிகள் அங்குச் சென்றடையவும் ஆசியான் பங்காளித்துவ நாடுகள் உதவ வேண்டும் என்று பிரதமர் லாரன்ஸ் வோங் கேட்டுக்கொண்டுள்ளார்.
தேசிய அளவில் இணக்கம் கண்டு மியன்மாரில் அமைதியை நிலைநிறுத்த ஆசியான் நாடுகள் ஆவன செய்யும் என்று கூறிய திரு வோங், பங்காளித்துவ அமைப்புகளும் அந்த முயற்சியில் பங்குகொள்ள முன்வர வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆசியான் உச்சநிலை மாநாட்டின் ஓர் அங்கமாக அக்டோபர் 11ஆம் தேதி லாவோஸ் தலைநகர் வியந்தியனில் நடைபெற்ற 19வது கிழக்கு ஆசிய மாநாட்டில் அவர் உரையாற்றினார்.
ஆசியான் நாடுகளுடன் பார்வையாளரான தீமோர் லெஸ்டேவும் பங்காளித்துவ நாடுகள் எட்டும் அந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டன. ஆஸ்திரேலியா, சீனா, இந்தியா, ஜப்பான், நியூசிலாந்து, தென்கொரியா, ரஷ்யா, அமெரிக்கா ஆகியவை அந்த எட்டு நாடுகள்.
பிரதமர் வோங் தமது உரையில், தென்கிழக்காசிய வட்டாரத்தில் முக்கியப் பங்கு வகிக்கும் நாடுகளை ஒரே கூரைக்குள் கொண்டுவரும் ஆக்ககரமான தளமாக கிழக்கு ஆசிய மாநாடு விளங்குவதாகக் குறிப்பிட்டார்.
வட்டாரச் சவால்களை எதிர்கொள்ளப் பங்காளித்துவ நாடுகள் ஆதரவுக் கரம் நீட்டினால் மட்டுமே கிழக்கு ஆசிய மாநாட்டால் முக்கியப் பணியை ஆற்றமுடியும் என்று அவர் நினைவுறுத்தினார்.
முக்கியப் பெரிய நாடுகளுடனான வேறுபாடுகளைச் சமாளித்து ஆசியாவில் முழுவீச்சில் சண்டை ஏற்படாமல் தடுக்க இந்த அமைப்பு உதவும் என்றார் அவர்.
உத்திபூர்வ கலந்துரையாடல்களை வலுவாக்குவதுடன் பேச்சோடு நின்றுவிடாமல் ஆக்ககரமான திட்டங்களில் இணைந்து பணியாற்ற வேண்டும் என்றும் பிரதமர் குறிப்பிட்டார்.
தொடர்புடைய செய்திகள்
அனைவரும் அனைத்து அம்சங்களிலும் ஒருமித்த கருத்தையே கொண்டிருப்பது சாத்தியமில்லை என்றாலும் அனைவரின் கருத்துகளுக்கும் செவிசாய்த்து ஒருவரையொருவர் புரிந்துகொள்ள வேண்டும் என்றார் அவர். அவற்றின்வழியே நம்பகத்தன்மையைக் கட்டியெழுப்பி ஒத்துழைப்புக்கு வழிவகுக்க முடியும் என்றார் பிரதமர்.
முன்னதாக அமெரிக்காவுடனான ஆசியான் நாடுகளின் சந்திப்பில் பேசிய பிரதமர், ஆசியானின் பொறுப்புணர்வுடனான செயற்கை நுண்ணறிவு வழித்தடத்திற்கு அமெரிக்காவின் ஆதரவை எதிர்பார்ப்பதாகக் கூறினார்.
பாதுகாப்பான, உறுதியான, நம்பகமான செயற்கை நுண்ணறிவுக்கு ஆதரவளித்து ஆசியான்-அமெரிக்கத் தலைவர்கள் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர்.
வட்டார அமைப்புடன் அவ்வாறு செய்யும் முதல் பங்காளித்துவ நாடு அமெரிக்கா என்று பிரதமர் வோங் குறிப்பிட்டார்.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஆண்டனி பிளிங்கன் கலந்துகொண்ட அந்தக் கூட்டத்தில், சிங்கப்பூரும் அமெரிக்காவும் எரிசக்தித் தொடர்புத்தன்மை குறித்துக் கூட்டாக நடத்திய ஆய்வின் முடிவுகள், முன்மொழியப்பட்ட ஆசியான் ‘பவர் கிரிட்’ எனும் எரிசக்திக் கட்டமைப்பை உருவாக்க பங்காற்றும் என்றார் திரு வோங்.
நீடித்த நிலைத்தன்மையுடைய எதிர்காலத்திற்கு இருதரப்பினரும் இணைந்து பணியாற்ற வேண்டுமெனத் திரு வோங் அறைகூவல் விடுத்தார்.