கொள்கலன்களை ஏற்றிச் செல்லும் கனரக வாகனம் ஒன்று கெப்பல் முனையத்தில் கடலுக்குள் விழுந்தது.
அதை ஓட்டிச்சென்ற 44 வயது லாரி ஓட்டுநர் உயிர் இழந்தார். அச்சம்பவம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 31) நடந்தது.
எண் 101 கெப்பல் சாலையிலிருந்து பின்னிரவு 1.45 மணிக்கு உதவி கோரி காவல் துறைக்கு அழைப்பு கிடைத்தது.
அந்த இடத்துக்குச் சென்ற சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை, கப்பல் துறையில் முனையில் கனரக வாகனம் ஒன்று இருந்ததாகக் கூறியது. வாகனத்தின் கொள்கலன் ஏற்றும் பின்பகுதி கடலுக்குள் விழுந்து மூழ்கியிருந்ததாக குடிமைத் தற்காப்புப் படையினர் தெரிவித்தனர்.
வாகனத்தின் முன்பகுதி நகராமல் இருக்க சிங்கப்பூர் துறைமுக ஆணைய ஊழியர்கள் உதவினர் என்றும் குடிமைத் தற்காப்புப் படையின் பேரிடர் உதவி, மீட்புக் குழுவினர் நீருக்குள் தேடினர் என்றும் கூறப்பட்டது.
சிங்கப்பூர் கடற்துறை, துறைமுக ஆணையம், அச்சம்பவம் பற்றி தனது கடற்துறைப் பாதுகாப்புக் கட்டுப்பாட்டு நிலையத்துக்கு அதிகாலை 2 மணி அளவில் தகவல் கிடைத்ததாகக் கூறியது.
மீட்புப் பணிகளில் உதவ ஆணையம் தனது சுற்றுக்காவல் படகை உடனடியாக அனுப்பியது.
14 மீட்டர் ஆழத்திலிருந்து ஓட்டுநரின் சடலத்தைத் தனது முக்குளிப்பாளர்கள் மீட்டதாக சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை சொன்னது. அவரது சடலம் வாகனத்தில் ஓட்டுநர் அமர்ந்திருக்கும் பகுதியிலிருந்தது.
அவர் உயிர் இழந்துவிட்டதாக சம்பவ இடத்திலேயே மருத்துவ அதிகாரிகள் தெரிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையின் அடிப்படையில் இச்சம்பவத்தில் சூது நிகழ்ந்திருக்கும் சாத்தியமில்லை என்று காவல்துறை கூறியது. விசாரணை தொடர்கிறது.

