ரஷ்ய அதிபர் விளாடிமிர் புட்டின், உக்ரேன் மீதான போரைத் தொடர இருப்பதாகச் சூளுரைத்துள்ளார்.
அமெரிக்கா தலைமையிலான நேட்டோ ராணுவக் கூட்டணி பிரச்சினையை மோசமாக்குவதாகக் கூறிய அவர், மாஸ்கோவைத் தோற்கடிக்கலாம் என்று அது தவறான நம்பிக்கை கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டார்.
போர் தொடங்கி ஓராண்டு முடிவடையவிருக்கும் நிலையில் நேற்று திரு புட்டின், நாட்டின் அரசியல் தலைவர்கள், ராணுவ உயரதிகாரிகள் உள்ளிட்டோர் முன்னிலையில் உரையாற்றினார்.
நாட்டின் எதிர்காலத்தையும் நாட்டு மக்களின் எதிர்காலத்தையும் வரையறுக்கக்கூடிய முக்கிய வரலாற்று நிகழ்வுகள் தற்போது நடைபெறுகின்றன என்றாரவர்.
சென்ற ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி உக்ரேன்மீது 'சிறப்பு ராணுவ நடவடிக்கை' மேற்கொள்ள உத்தரவிடும் நிலைக்குத் தாம் தள்ளப்பட்டதாக ரஷ்ய அதிபர் கூறினார்.
"அமைதியான வழியில் சிக்கலுக்குத் தீர்வுகாண, ஆன அனைத்து முயற்சிகளையும் ரஷ்யா மேற்கொண்டது. பொறுமை காத்தது.
"ஆனால் போருக்கு முன்னரே உக்ரேன் மேற்கத்திய நாடுகளிடம் ஆயுதம் வாங்க முனைந்தது. ரஷ்யா 2014ல் இணைத்துக்கொண்ட கிரிமியா மேல் தாக்குதல் நடத்தவும் அது திட்டமிட்டது," என்றார் அவர்.
கியவ் அரசாங்கமும் அதன் மீது ஆதிக்கம் செலுத்தும் மேற்கத்திய அதிபதிகளும் உக்ரேனிய மக்களைப் பிணைபிடித்து உள்ளனர் என்று அவர் சாடினார்.
தொடர்புடைய செய்திகள்
ரஷ்யாவைத் தோற்கடிக்க முடியாது என்றும் ரஷ்ய சமூகத்தைப் பிளவுபடுத்தும் மேலை நாடுகளின் முயற்சி பலிக்காது என்றும் திரு புட்டின் கூறினார்.
பெரும்பாலான ரஷ்யர்கள் உக்ரேன் மீதான போருக்கு ஆதரவு தெரிவித்திருப்பதாக அவர் குறிப்பிட்டார். போரில் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு சிறப்பு நிதி வழங்க ரஷ்ய அதிபர் உறுதியளித்தார்.


