சிங்கப்பூரின் அரசியல் எதிர்காலத்திற்கு மறுவடிவம் தர உள்ளது இன்றைய (மே 3) தேர்தல். கிட்டத்தட்ட 2.6 மில்லியன் சிங்கப்பூரர்கள் தங்களின் தொகுதியைப் பிரதிநிதிக்க விரும்பும் நாடாளுமன்ற உறுப்பினரையும் தங்களை வழிநடத்த இருக்கும் அரசாங்கத்தையும் தேர்வு செய்ய உள்ளனர்.
கடந்த 66 ஆண்டுகளாக ஆளும் மக்கள் செயல் கட்சியின் (மசெக) நான்காம் தலைமுறைத் தலைவராக, அக்கட்சியை இந்தத் தேர்தலில் முதன்முறையாக வழிநடத்திச் செல்கிறார் பிரதமர் லாரன்ஸ் வோங்.
சிங்கப்பூரின் 14வது பொதுத் தேர்தலில் 11 கட்சிகளின் சார்பாக 204 வேட்பாளர்களும் இரு சுயேச்சை வேட்பாளர்களுமாகச் சேர்த்து 206 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
மொத்தம் 33 தொகுதிகளில் 97 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான இடங்கள் உள்ளன. அதில் ஐவர் கொண்ட மரின் பரேட்-பிரேடல் ஹைட்ஸ் குழுத்தொகுதியில் மசெக அணி, வேட்புமனுத் தாக்கல் தினமான ஏப்ரல் 23ஆம் தேதியன்றே போட்டியின்றி வெற்றிபெற்றதாக அறிவிக்கப்பட்டது.
பிரதமராகப் பதவியேற்று முதல் ஆண்டு நிறைவடைய இன்னும் 12 நாள்களே இருக்கும் நிலையில், மசெகவின் தலைமைச் செயலாளராக பொறுப்பேற்று ஆறு மாதங்களிலேயே இந்த மாபெரும் தேர்தலில் களம்காண்கிறார் திரு வோங். இதுவரை இல்லாத வகையில் ஆக அதிகமாக 32 புதுமுகங்களை அறிமுகம் செய்து மசெக தேர்தலைச் சந்திக்கிறது.
சிங்கப்பூரின் கிழக்குப் பகுதியில் போட்டி கடுமையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஆகப் பெரிய எதிர்க்கட்சியான பாட்டாளிக் கட்சி, 26 வேட்பாளர்களைப் பெரும்பாலும் கிழக்குப் பகுதியிலுள்ள தொகுதிகளில் நிறுத்தியுள்ளது.
செங்காங், பொங்கோல், தெம்பனிஸ், பாசிர் ரிஸ் - சாங்கி, ஈஸ்ட் கோஸ்ட், அல்ஜுனிட் குழுத்தொகுதிகளிலும் ஹவ்காங், ஜாலான் காயு, தெம்பனிஸ் சங்காட் தனித்தொகுதிகளிலும் பாட்டாளிக் கட்சி மசெக அணியுடன் பொருதுகிறது. தெம்பனிசில் நான்கு முனைப் போட்டி நிலவுகிறது.
பத்தாண்டுகளுக்குப் பின் பெரிய அளவில் நேரடி பிரசாரக் கூட்டங்கள் தீவெங்கும் பல இடங்களில் நடைபெற்றது பலருக்குப் புது அனுபவமாக இருந்தது.
தொடர்புடைய செய்திகள்
குடும்பங்கள், மூத்தோர், இளையர்கள் என சமூகத்தில் பலதரப்பட்ட மக்களும் அன்றாடம் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்பது நாள் இரவுநேரப் பிரசாரக் கூட்டங்களில் கலந்துகொண்டனர். கருத்துகளைக் கேட்டறிய வந்தவர்களைத் தாண்டி, ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்பு இந்த முறை 10 ஆண்டுகளுக்குப்பின் கிடைத்ததைக் கைவசப்படுத்தி, பிரசாரங்களின் தன்மையை அறிய வந்தவர்களும் ஏராளம். கடந்த 2020ஆம் ஆண்டு தேர்தல், கொவிட்-19 நோய்ப்பரவல் சூழலில் நடைபெற்றதையடுத்து நேரடிப் பிரசாரக் கூட்டங்கள் நடைபெறவில்லை.
இந்த முறை அரங்கம் நிரம்பிய பிரசாரக் கூட்டங்களில் கருத்துகள் பகிரப்பட்டன என்று கூறுவதைத் தாண்டி, கொள்கைகள் குறித்த காரசார விவாதங்களும், ஒருதரப்பினர் மற்றோர் அணியைக் குறிவைத்து பேசிய உணர்ச்சிமிகு உரைகளும் கைதட்டல்களும் ஆரவாரமும் அரங்கை நிரப்பின.
சிங்கப்பூரின் தனித்துவமிக்க உணவங்காடி நிலையங்கள் அரசியல் பிரசாரத்திற்கான முக்கிய வளாகங்களாக மாறின. கட்சி பேதமின்றி வேட்பாளர்கள், அவரவர் போட்டிபோடும் தொகுதிகளில் உள்ள மக்கள் அதிகம் வந்துசெல்லும் உணவங்காடி நிலையங்களுக்குச் சென்று வாக்காளர்களிடம் ஆதரவு திரட்டினர்.
போட்டிபோடும் எதிர் அணியினரையும் சந்திக்கும் தருணங்கள் எழுந்தன. கைகுலுக்கி, ஒருவருக்கொருவர் வாழ்த்து கூறி தங்கள் பணியைச் செய்தனர்.
அதனைத் தாண்டி, சமூக ஊடகங்களின் பங்கும் கடந்த தேர்தல்களிலிருந்து அதிகமாகவே உணரப்பட்டது. காணொளிகள், வலையொளிக் கலந்துரையாடல்கள், நேரலைப் பிரசாரங்கள், படச் செய்திகள் என இன்றைய காலகட்டத்தின் தேவைக்கு ஏற்பவும் இன்றைய தலைமுறையினர் இருக்கும் தளங்களிலும் தங்களை வேட்பாளர்கள் ஈடுபடுத்திக்கொண்டனர்.
மோசமான உலகச் சூழல், விடாப்பிடியான பணவீக்கம், உயர்ந்துவரும் வாழ்க்கைச் செலவினம், ஏறுமுகமாகவே இருக்கும் வீட்டு விலைகள் போன்ற சூழலில் இந்தத் தேர்தல் நடைபெறுகிறது.
பிரசாரக் கூட்டங்களில் அனைத்துக் கட்சியினரும் அவரவரின் கொள்கைப் பிடிப்புகளைப் பகிர்ந்ததோடு ஆளும் மசெகவின் கொள்கைகளையும் மறுத்து, கேள்வி எழுப்பினர்.
எட்டுக் கட்சிகள் இருமுறை தொலைக்காட்சிவழி அரசியல் ஒலிபரப்பை நடத்தின. அதில் தங்கள் கட்சிகளின் கருத்துகளை வெளிப்படுத்தின. தமிழில் அந்த ஒலிபரப்பை ஆறு கட்சிகள் நடத்தின.
இந்தத் தேர்தலில், இந்தியச் சமூகத்தினரிடையே பெரிதும் வரவேற்பு பெற்ற அம்சங்களில் ஒன்று, அதிகமான எண்ணிக்கையில் இந்திய வேட்பாளர்கள் அறிமுகம் கண்டதுதான். பெரும்பாலான கட்சிகளின் சார்பாக 31 இந்திய வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பது மட்டுமல்லாமல் தமிழ் பேசும் வேட்பாளர்களாக அவர்கள் இருப்பது மேலும் சிறப்பு.
அத்துடன், இந்தத் தேர்தலில் மொத்தம் 53 பெண் வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். சிங்கப்பூர் வரலாற்றில் இது ஆக அதிகமான எண்ணிக்கை. இருப்பினும், மொத்த வேட்பாளர்களில் இது 25 விழுக்காடுதான்.
அனைத்துக் கட்சிகளிலும் மூத்த வேட்பாளர்களும் இளம் வேட்பாளர்களும் கலந்தே உள்ளனர். பெரும்பாலான கட்சிகள் இளம் வயதினரை வேட்பாளர்களாகத் தேர்ந்தெடுத்துள்ளது புதுப்பிப்பில் அவர்களின் கவனம் இருப்பதைச் சுட்டுகிறது.
ஆக இளம் வேட்பாளருக்கு 24 வயது, ஆக மூத்தவருக்கு 85 வயது. 40 வயதுக்குட்பட்ட 44 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.