சிங்கப்பூருக்கு வெளிநாட்டுப் பயணிகளின் வருகை இவ்வாண்டு 12 மில்லியன் முதல் 14 மில்லியன் வரை எட்டக்கூடும். 2024க்குள் பயணத்துறை முழுமையாக மீட்சியடையும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சுற்றுப்பயணிகள் இங்கு செலவு செய்யும் தொகை இவ்வாண்டு $18 பில்லியன் முதல் $21 பில்லியன் வரையாக அதிகரிக்கலாம். சிங்கப்பூர் பயணத்துறைக் கழகம் செவ்வாய்க்கிழமை (ஜனவரி 17) இந்த முன்னுரைப்பை வெளியிட்டுள்ளது.
கடந்த ஆண்டு சிங்கப்பூருக்கு வந்த வெளிநாட்டுப் பயணிகளின் எண்ணிக்கை, எதிர்பார்க்கப்பட்டதைவிட அதிகமாக இருந்தது. கடந்த ஆண்டு 6.3 மில்லியன் வெளிநாட்டுப் பயணிகள் இங்கு வருகை புரிந்தனர். அவர்கள் இங்கு செலவு செய்த தொகை ஏறக்குறைய $14 பில்லியன்.
சுற்றுப்பயணிகள் இங்கு செலவு செய்த தொகையைப் பொறுத்தமட்டில், இந்தோனீசியாவிலிருந்து வந்தோர் முதலிடம் பிடித்தனர். கடந்த ஆண்டு அவர்கள் இங்கு செலவு செய்த தொகை $1.1 பில்லியன்.
இந்தியாவிலிருந்து இங்கு வந்தவர்கள் இரண்டாமிடத்தையும் ஆஸ்திரேலியாவிலிருந்து இங்கு வந்தவர்கள் மூன்றாமிடத்தையும் பிடித்தனர். அவர்கள் செலவு செய்த தொகை முறையே $704 மில்லியன், $633 மில்லியன்.
எனினும், கொவிட்-19க்கு முன்பிருந்த நிலவரத்துடன் ஒப்பிடுகையில், சுற்றுப்பயணிகளின் எண்ணிக்கையும் அவர்கள் செலவு செய்த தொகையும் இன்னும் குறைவாகவே உள்ளது.
2019ல் சுற்றுப்பயணிகளின் வருகை சாதனை அளவாக 19.1 மில்லியனை எட்டியிருந்தது. அந்த ஆண்டு அவர்கள் இங்கு செலவு செய்த தொகை $27.7 பில்லியன்.
கவலைக்குரிய புதிய கொவிட்-19 திரிபு தலைதூக்காமல், அனைத்துலக விமானச் சேவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கப்படுவதன் அடிப்படையில் சுற்றுப்பயணிகளின் வருகை குறித்த முன்னுரைப்பு வெளியிடப்பட்டுள்ளது.

