உள்ளூர் காய்கறிகளை வாங்க சிங்கப்பூரர்களுக்கு வலியுறுத்து

2 mins read
c6f3c106-fd99-45b7-8554-3ec04e5b274a
உள்ளூர் காய்கறிகளுக்கு ஆதரவளிப்பது உள்ளூர் பண்ணைகளில் உற்பத்தியை மேலும் அதிகரிக்க ஊக்கமூட்டும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார். கோப்புப் படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

உள்ளூரில் உற்பத்தி செய்யப்படும் காய்கறிகளை வாங்கி உள்ளூர் பண்ணைகளையும் உள்ளூர் வர்த்தகங்களையும் ஆதரிக்குமாறு சிங்கப்பூரர்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

ஜோகூர் கடற்பாலத்துக்கு அப்பால் பண்ணைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

இந்த நேரத்தில் உள்ளூர் விவசாயிகள் தொடர்ந்து தங்களுடைய காய்கறி விளைச்சலில் ஈடுபடுவதை ஊக்குமூட்டும் வகையில் உள்ளூர் காய்கறிகளை வாங்க வேண்டும் என்று நீடித்த நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்தார்.

"மலேசியாவில் கடந்த சில நாள்களாக கனமழை பெய்து வருவதால் அங்குள்ள பண்ணைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. மலேசியாவில் காய்கறி விலை அதிகரிக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இது நம்மையும் பாதிக்கும்," என்று தனது ஃபேஸ்புக் பதிவில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

"காய்கறி விலையை கட்டுக்குள் வைத்திருப்பதற்காக உள்ளூர் உற்பத்தியைப் பெருக்க உள்ளூர் பண்ணைகளுடன் நீடித்த, நிலைத்தன்மை, சுற்றுப்புற அமைச்சு இணைந்து செயல்பட்டு வருகிறது," என்றார் அவர்.

இந்த நிலையில் உள்ளூர் காய்கறி விளைச்சலுக்கு ஆதர வளித்து வாடிக்கையாளர்கள் தங்களுடைய பங்கை ஆற்ற வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

"இது, உள்ளூர் உற்பத்தியை மேலும் அதிகரிக்க ஊக்கமூட்டும். "எவ்வளவு முடியுமோ அந்த அளவுக்கு உள்ளூர் உற்பத்திக்கு ஆதரவளிக்க சிங்கப்பூரர்களை ஊக்கமூட்டுகிறேன்.

"சிங்கப்பூர் வேளாண்-உணவுத் துறை துடிப்புடன் வளர்ச்சி அடைய நாம் அனைவரும் உதவுவோம்," என்று அமைச்சர் கிரேஸ் ஃபூ தெரிவித்துள்ளார்.

மலேசியாவில் ஜோகூர் உட்பட பல மாநிலங்கள் வெள்ளத்தில் தவிக்கின்றன. ஜோகூரில் விடாமல் பெய்யும் மழையால் பத்துக்கும் மேற்பட்ட மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன.

ஞாயிறு மாலை நிலவரப்படி ஏறக்குறைய 50,000க்கும் மேற்பட்ட மக்கள் ஜோகூர், பாகாங், மலாக்காவில் உள்ள 300 தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்று மலேசிய சமூகநல இணையத்தளம் தெரிவிக்கிறது.