தமிழ் முரசு வாசகர்களுக்கு எங்கள் உளங்கனிந்த தீபாவளி வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

வெளிநாட்டு ஊழியர் விதிமுறைகளைத் தளர்த்த கோரிக்கை

2 mins read
dfe4b43a-4758-4b9e-be13-8fb31bf4104d
சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஒதுக்கீடு மற்றும் தீர்வை முறையை அரசாங்கம் பின்பற்றி வருகிறது. படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் -

வெளிநாட்டு ஊழியர்களுக்கான விதிமுறைகளை அரசாங்கம் விரைவில் தளர்த்தும் என்று சிங்கப்பூர் வர்த்தக சம்மேளனம் நம்பிக்கையுடன் உள்ளது.

சிறிய, நடுத்தர நிறுவனங்கள் போதுமான ஊழியர்கள் இல்லாமல் நெருக்கடியைச் சந்திக்கின்றன. எனவே, அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்மேளனம் வலியுறுத்தியது.

முன்கள ஊழியர்களில் பாதிக்கும் மேற்பட்டோர் தங்களுக்கு வேலைப்பளு அதிகரித்துவிட்டதாகக் கூறியுள்ளனர். இவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வேலையிலிருந்து விலகுவது பற்றி பலமுறை யோசித்ததாகவும் தெரிவித்தனர்.

'குவால்டிரிக்ஸ்' எனும் நிர்வாக நிறுவனம் நடத்திய ஆய்வில் இந்த விவரங்கள் தெரிய வந்துள்ளன. கடந்த 2022ஆம் ஆண்டில் ஜூலை முதல் செப்டம்பர் வரை 194 பேரிடம் அது ஆய்வு நடத்தியது.

இது குறித்துப் பேசிய சம்மேளனத்தின் வழக்கு விவகார, கொள்கைப் பிரிவின் இயக்குநர் ஆல்பர்ட் ட்சுய், "வர்த்தகங்களுக்கு நெருக்கடியான நேரமிது, வர்த்தக வாய்ப்புகளை கைப்பற்றியாக வேண்டும். உலகத்துடன் போட்டியிட வேண்டும். இந்த நிலையில் செலவும் மனிதவள நெருக்கடியாலும் நிறுவனங்கள் பின்தங்கிவிடக் கூடாது," என்றார்.

ஊழியர்களின் சம்பளச் செலவு பெரும் சவாலாக இருப்பதாக 75 விழுக்காடு நிறுவனங்கள் கூறியுள்ளன.

மாறாக 52 விழுக்காட்டு நிறுவனங்கள் தளவாட வசதிகளைப் பற்றியும் 45 விழுக்காக்காட்டு நிறுவனங்கள் அடிப்படை அம்சங்கள் பற்றியும் கவலை தெரிவித்துள்ளன என்று சிங்கப்பூரின் 28,000 நிறுவனங்களையும் வர்த்தக சபைகளையும் பிரதிநிதிக்கும் சம்மேளனம் கூறியது.

சிங்கப்பூரில் வெளிநாட்டு ஊழியர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த ஒதுக்கீடு மற்றும் தீர்வை முறையை அரசாங்கம் பின்பற்றி வருகிறது.

இந்த நிலையில் வெளிநாட்டு ஊழியர்களுக்கான தீர்வை உயர்த்தப்படுவதை தற்காலிகமாக கொள்கை வகுப்பாளர்கள் சில ஆண்டுகளுக்கு நிறுத்தி வைப்பார்கள் என்றும் வயது அடிப்படையிலான எஸ்-பாஸ் சம்பள முறை அகற்றப்படும் என்றும் அதிக வெளிநாட்டு ஊழியர்கள் அனுமதிக்கப்படுவர் என்றும் சம்மேளனம் நம்புகிறது.

வரும் செப்டம்பர் மாதத்திலிருந்து சில பிரிவுகளில் வொர்க் பாஸ்களுக்கான தீர்வையும் சம்பளத்துக்கான குறைந்தபட்ச தகுதியும் உயர்த்தப்படுவதைத் தொடர்ந்து சம்மேளனத்தின் அறிக்கை வெளியாகியுள்ளது.

சேவைத் துறையில் அடிப்படை திறனுள்ள ஊழியர்களுக்கான தீர்வை மாதம் $450லிருந்து $800 வரையுள்ளது. அதிகபட்சமாக ஒரு நிறுவனத்தின் மொத்த ஊழியர் அணியில் 35 விழுக்காடு வரை வெளிநாட்டு ஊழியர்களை வேலைக்கு அமர்த்தலாம்.

எஸ்-பாஸ் வெளிநாட்டு ஊழியர்களுக்கான குறைந்தபட்ச மாதச் சம்பளம் $3,000. இந்தச் சம்பளம் 23 வயதிலிருந்து படிப்படியாக அதிகரித்து 45வது வயது அல்லது அதற்கு மேற்பட்ட வயதில் 5,500 வெள்ளியாக இருக்கும்.

இதற்கிடையே கட்டுமானத் துறை சூடுபிடித்துள்ளதால் சில ஊழியர் தங்குவிடுதிகளில் வாடகை இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது.

"நிறுவனங்கள் தங்களுடைய நடவடிக்கைகளை மின்னிலக்கமயமாக்க வேண்டும். உள்ளூர் ஊழியர்களை வேலைக்கு அமர்த்த வேண்டும் என்ற அரசாங்கத்தின் அழைப்பை ஏற்கிறோம். ஆனால் நடைமுறையில் சில குறிப்பிட்ட வேலைகளைச் செய்ய சிங்கப்பூரர்கள் முன்வருவதில்லை," என்று திரு ட்சுய் மேலும் தெரிவித்தார்.