ஒரு சீன நகரத்தில் மட்டும் நாளுக்கு 500,000 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

ஒரு சீன நகரத்தில் மட்டும் நாளுக்கு 500,000 புதிய கிருமித்தொற்றுச் சம்பவங்கள்

2 mins read
28d07087-84e5-4793-a17f-95383a9c5285
சீனாவின் வடமேற்கில் உள்ள சொங்சிங் நகரத்தில் உள்ள மருத்துவமனை ஒன்றில் இடம் ஒதுக்கப்பட்டு, கொவிட்-19 தொற்றியவர்களுக்கு சிகிச்கை அளிக்கப்பட்டது. படம்: ஏஎஃப்பி -

சிங்டாவ் எனும் ஒரு சீன நகரத்தில் மட்டும் அரை மில்லியன் பேருக்கு அன்றாடம் கொவிட்-19 கிருமி தொற்றுவதாக மூத்த சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்திருக்கிறார்.

ஆனால் வந்த வேகத்திலேயே அவர் வெளியிட்ட தகவல் நீக்கப்பட்டுள்ளது.

சிங்டாவ் நகரில் நாள் ஒன்றுக்கு 490,000 முதல் 530,000 புதிய தொற்றுச் சம்பவங்கள் ஏற்படுவதாக நகராட்சியின் சுகாதாரத் துறைத் தலைவர் போ டாவ் கூறினார் என்று சீன கம்யூனிஸ்ட் கட்சி நடத்தும் உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

சீனாவின் கிழக்குப் பகுதியில் உள்ள சிங்டாவ் நகரில் 10 மில்லியன் பேர் வசிக்கின்றனர்.

விரைவில் அங்கு தொற்று எண்ணிக்கை உச்சத்தை அடையும் என்று போ கூறியிருந்தார்.

வாரயிறுதியில் தொற்று எண்ணிக்கை 10 விழுக்காடு அதிகரிக்கும் என்று எதிர்பார்ப்பதாகவும் அவர் சொன்னார்.

வெள்ளிக்கிழமை வெளிவந்த அச்செய்தி பல்வேறு ஊடகங்களில் பகிரப்பட்டது.

ஆனால் சனிக்கிழமை காலையில் தொற்று எண்ணிக்கை பற்றிய தகவல், அச்செய்தியிலிருந்து நீக்கப்பட்டது.

சீன பெருநகரங்களிலும் சிறிய நகரங்களிலும் தொற்று எண்ணிக்கை பல்கிப் பெருகி உள்ளது

மருந்துக் கடைகளில் சளிக் காய்ச்சல், இருமல் மருந்துகள் இல்லை. மருத்துவமனைகளில் அவசர சிகிச்சைப் பிரிவுகளும் வார்டுகளும் நிரம்பி வழிகின்றன.

தகனச் சாலைகளிலும் இறுதிச் சடங்கு நிலையங்களிலும் பல நாள் காத்திருக்க வேண்டிய நிலை.

மாண்டவர்களில் மூத்தோர்தான் அதிக எண்ணிக்கையில் உள்ளனர் என்று கூறப்பட்டுள்ளது.

ஆனால் கட்டாயப் பரிசோதனைகள் நிறுத்தப்பட்டதால், தொற்று எண்ணிக்கை உண்மையில் என்னவென்று தெரியவில்லை.

சீன அரசாங்கமோ சனிக்கிழமை அன்று நாட்டில் 4,103 புதிய தொற்றுகள் பதிவு செய்யப்பட்டதாகவும் யாரும் இறக்கவில்லை என்றும் கூறியது.