வெளிச்சத்துக்கு வந்த குளறுபடி; எஸ்பிஎச் மீடியா மூத்த ஊழியர்கள் பலருக்கு எதிராக நடவடிக்கை

வெளிச்சத்துக்கு வந்த குளறுபடி; எஸ்பிஎச் மீடியா மூத்த ஊழியர்கள் பலருக்கு எதிராக நடவடிக்கை

2 mins read
d2e22f1e-687e-46bb-b240-d80ed7a0a779
-

எஸ்பிஎச் மீடியாவில் நடத்தப்பட்ட அமைப்பு ரீதியான விசாரணையை அடுத்து, அதன் விற்பனைத் தரவுகளில் குளறுபடி இருந்தது வெளிச்சத்துக்கு வந்தது.

இதனைத் தொடர்ந்து, அந்நிறுவனத்தின் மூத்த ஊழியர்கள் பலருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட சிலர் பதவி விலகி விட்டனர்.

"செயல்முறைகளை வலுப்படுத்த உடனடி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சிலர் பணியிலிருந்து விலகிவிட்டனர்," என்று எஸ்பிஎச் மீடியாவின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

இந்த விவகாரத்துடன் தொடர்புடைய ஊழியர்களின் பெயர்களை எஸ்பிஎச் மீடியா வெளியிடவில்லை. 2020 செப்டம்பருக்கும் கடந்த ஆண்டு மார்ச் மாதத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்துக்கான செயல்முறைகள் அமைப்பு ரீதியான விசாரணைக்கு உட்பட்டன.

அமைப்பு ரீதியான விசாரணை மூலம் தரவுகளில் சில முரண்பாடுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக எஸ்பிஎச் மீடியா தெரிவித்தது.

இதன் விளைவாக எஸ்பிஎச் மீடியாவின் அனைத்து நாளிதழ்களின் அன்றாட சராசரி விற்பனையில் ஏற்பட்ட வித்தியாசம் 85,000க்கும் 95,000க்கும் இடைப்பட்டிருந்தது.

இந்த எண்ணிக்கை, பதிவு செய்யப்பட்ட அன்றாட சராசரி விற்பனையில் 10 முதல் 12 விழுக்காட்டுக்குச் சமம்.

கண்டுபிடிக்கப்பட்ட முரண்பாடுகள் குறித்து பல உதாரணங்களை எஸ்பிஎச் மீடியா, ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் நாளிதழிடம் மேற்கோள் காட்டியது.

காலாவதியான ஒப்பந்தங்கள் விற்பனைத் தரவுகளில் தொடர்ந்து சேர்த்துக்கொள்ளப்பட்டதும் அதில் ஒன்று.

விற்பனை செய்யப்பட்டதாகக் கணக்கில் காட்டுவதற்காகவே சில பிரதிகள் அச்சிடப்பட்டு பிறகு அழிக்கப்பட்டன.

சந்தாக்களின் எண்ணிக்கையும் பலமுறை இரட்டிப்பாகக் கணக்கு காட்டப்பட்டது. பொய்யான விற்பனைக்காக திட்டக் கணக்கு ஒன்று அமைக்கப்பட்டு கூடுதல் நிதி பெறப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டது.

குறிப்பிட்ட சில விற்பனைத் தரவுகள் குத்துமதிப்பாகப் பதிவு செய்யப்பட்டதாக செய்தித் தொடர்பாளர் கூறினார்.

தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ், தி பிஸ்னஸ் டைம்ஸ், சாவ்பாவ், ஷின்மின், பெரித்தா ஹரியான், தமிழ் முரசு ஆகிய நாளிதழ்கள் எஸ்பிஎச் மீடியாவுக்குச் சொந்தமானவை.

விற்பனைத் தரவு முரண்பாடுகள் குறித்து தொடர்பு, தகவல் அமைச்சிடம் தெரிவிக்கப்பட்டது.

எஸ்பிஎச் மீடியாவுக்கு நிதி வழங்க அரசாங்கம் எடுத்த முடிவை இந்த விவகாரம் பாதிக்குமா என்பதைக் கண்டறிய அமைச்சு விசாரணை நடத்தும்.