தமிழ் முரசின் இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்!
தீபாவளி தொடர்பான செய்திகள், காணொளிகளுக்கு!

புதிய பாதையில் சிங்கப்பூர்-இந்தியா உறவு: அதிபர் தர்மன்

3 mins read
aa3c2b9c-94e7-4a35-ad93-824152f8c3b5
புதுடெல்லியில் சிங்கப்பூர் அதிபர் தர்மன் சண்முகரத்னம், அவரின் துணைவியார் ஆகியோருடன் இந்திய அதிபர் திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி. - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இயல்பிலேயே பங்காளிகளான சிங்கப்பூர் - இந்தியா இடையிலான உறவு புதிய பாதையில் உள்ளது என்றும் 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த நாடாக விரும்பும் இந்தியாவின் பயணத்தில் சிங்கப்பூர் பங்குகொள்ளும் என்றும் அதிபர் தர்மன் சண்முகரத்னம் தெரிவித்துள்ளார்.

இருநாட்டு உறவில் தமக்கு நன்னம்பிக்கை உள்ளது என்ற அவர், அதற்கு இருதரப்புத் தலைவர்களும் முழு இணக்கத்துடன் செயல்படுவதைச் சுட்டிக்காட்டினார்.

இந்தியாவிற்கு ஐந்து நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டுள்ள அதிபர் தர்மனுக்கு வியாழக்கிழமை (ஜனவரி 16) இந்திய அதிபர் மாளிகையில் சடங்குபூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.

குதிரைகள் புடைசூழ, பீரங்கிக் குண்டுகள் முழங்க, அதிபர் தர்மனின் வாகனம் இந்திய அதிபர் மாளிகைக்குள் அணிவகுத்துச் சென்றது. இந்திய அதிபர் திரௌபதி முர்முவும் பிரதமர் நரேந்திர மோடியும் அவரை வரவேற்றனர். முப்படைகளின் முன்னிலையில் இருநாட்டு தேசிய கீதங்கள் ஒலித்தன. மரியாதை அணிவகுப்பைப் பார்வையிட்ட அதிபர், பின்னர் சிங்கப்பூர், இந்தியச் செய்தியாளர்களிடம் பேசினார்.

மரியாதை அணியைப் பார்வையிட்ட பின்னர், அதிபர் தர்மன் சண்முகரத்னம் செய்தியாளர்களிடம் பேசினார்.
மரியாதை அணியைப் பார்வையிட்ட பின்னர், அதிபர் தர்மன் சண்முகரத்னம் செய்தியாளர்களிடம் பேசினார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இருநாட்டுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் செழிப்பாக உள்ளதாகவும் பல ஆண்டுகளாக இந்தியாவின் ஆகப் பெரிய முதலீட்டாளராக சிங்கப்பூர் உள்ளதாகவும் தற்காப்பு உறவுகள் வலிமையாக உள்ளதாகவும் குறிப்பிட்ட திரு தர்மன், துடிப்புமிக்க உறவுகளைத் தாண்டி புதிய திட்டங்களில் ஒத்துழைப்பது குறித்து ஆராய்ந்து வருவதாகத் தெரிவித்தார்.

மேல்நிலை உற்பத்தி, பகுதி மின்கடத்தித் துறையின் இணக்கம் குறித்த பணிகள் நடந்துவருகின்றன. இந்தியாவில் பகுதி மின்கடத்திக்கான தளத்தை உருவாக்க சிங்கப்பூர் உதவி வருகிறது.

மின்னிலக்கத் துறையிலும் நீடித்த நிலைத்தன்மைத் துறையிலும் இருதரப்புக்கும் பலன் தரும் பல திட்டங்கள் ஆராயப்பட்டு வருகின்றன.

இந்தியாவின் கிழக்கு மாநிலங்களில் இந்திய அரசாங்கம் கவனம் செலுத்தி வரும் நிலையில், சிங்கப்பூர் அங்குள்ள வாய்ப்புகளை அரவணைக்கும் என்று திரு தர்மன் நம்பிக்கை தெரிவித்தார்.

குறிப்பாக ஒடிசா மாநிலம் தனிச்சிறப்புடன், மிகுந்த நம்பிக்கை அளிக்கும் மாநிலமாகத் திகழ்வதாகவும் வருணித்த திரு தர்மன், தமது பயணத்தின் ஓர் அங்கமான வர்த்தக நிறுவனங்களையும் கல்விசார் அமைப்புகளையும் வழிநடத்தி ஜனவரி 17, 18ஆம் தேதிகளில் ஒடிசாவிற்குச் செல்கிறார்.

கெப்பல், கேப்பிட்டாலேண்ட், சுர்பானா ஜூரோங், பிஎஸ்ஏ இந்தியா, எஸ்டி எஞ்சினியரிங், நன்யாங் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் எரிசக்தி ஆராய்ச்சிக் கல்விக் கழகம் போன்ற அமைப்புகளைச் சேர்ந்த மூத்த தலைவர்கள் அந்தப் பேராளர் குழுவில் இடம்பெறுகின்றனர்.

ஒடிசாவில் இயங்கும் உலகத் திறன்கள் மையத்தில் பேரளவில் செயலாற்றி வரும் சிங்கப்பூர், அந்த உறவை விரிவாக்குவதில் கடப்பாடு கொண்டுள்ளது என்றார் அதிபர். அதிபர் அந்த மையத்தைப் பார்வையிட உள்ளார்.

“பரந்த கண்ணோட்டத்துடன் இயன்றளவு கற்றுக்கொண்டு ஒத்துழைப்புக்கான பலன்மிக்க வாய்ப்புகளைக் காண முனைகிறோம்,” என்று அவர் நம்பிக்கையுடன் தெரிவித்தார்.

இந்தியாவில் வசித்துவரும் சிங்கப்பூரர்களுக்கு ஜனவரி 15ஆம் தேதி மாலை அளிக்கப்பட்ட விருந்தில் அதிபர் கலந்துகொண்டார். கிட்டத்தட்ட 200 பேர் பங்கேற்ற நிகழ்வில் உரையாற்றிய திரு தர்மன், இந்தியாவின் பன்முகத்தன்மையில் நம்மை உட்படுத்தி அதை அரவணைக்கவேண்டும் என்று அறிவுறுத்தினார்.

பயணத்தின் ஒரு பகுதியாக ஜனவரி 15ஆம் தேதி மாலை இந்தியாவில் வசித்துவரும் சிங்கப்பூரர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில் அதிபர் தர்மன் கலந்துகொண்டார்.
பயணத்தின் ஒரு பகுதியாக ஜனவரி 15ஆம் தேதி மாலை இந்தியாவில் வசித்துவரும் சிங்கப்பூரர்களுக்கு அளிக்கப்பட்ட விருந்தில் அதிபர் தர்மன் கலந்துகொண்டார். - படம்: ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்

இந்தியாவின் பலம் அதன் பன்முகத்தன்மை. இந்தியாவிலுள்ள வாய்ப்புகளை அறிந்து, எங்கெல்லாம் சிங்கப்பூரர்களால் தங்களது திறன்களையும் அனுபவங்களையும் கொண்டு மதிப்புள்ள பங்களிப்பை ஆற்ற முடியும் என்பதைக் கண்டறியவேண்டும் என்றார் அவர். அதை பணிவோடும், ஒருவருக்கொருவர் மரியாதையுடனும் செய்யவேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

“சிங்கப்பூரைக் கொண்டு இந்தியா பலன் பெற விரும்புகிறது. இந்தியாவைக் கொண்டு சிங்கப்பூர் பலன்பெற விரும்புகிறது. உறவுகளை வலுப்படுத்த ஒவ்வொருவரிடமும் உள்ள இந்த ஒருமித்த விருப்பமே எதிர்காலத்திற்கான கல்லால் கட்டப்பட்ட அடித்தளம்,” என்று வருணித்தார் திரு தர்மன்.

தமது பயணத்தின்போது இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்காரி, வேதித்துறை அமைச்சர் ஜெ.பி.நட்டா, தொழில்துறை அமைச்சர் பியுஷ் கோயல், ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், திறன் மேம்பாட்டு, தொழில்முனைப்பு, கல்வி துணையமைச்சருமான ஜெயந்த் சௌத்ரி ஆகியோருடன் அதிபர் தர்மன் இருதரப்புச் சந்திப்புகளை நடத்துகிறார்.

மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று அதிபர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.
மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்குச் சென்று அதிபர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். - படம்: MEAIndia/X

மகாத்மா காந்தியின் நினைவிடமான ‘ராஜ்காட்’டில் அதிபர் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பிரதமர் நரேந்திர மோடி[Ϟ]யுடனும் அதிபர் திரௌபதி முர்மு[Ϟ]வுடனும் அதிபர் தர்மன் இருதரப்புப் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அவருக்கு வியாழன் இரவு அரசுமுறை விருந்து உபசரிப்பு வழங்கப்பட்டது.

குறிப்புச் சொற்கள்