சென்னையில் தரையிறங்கிய நியூயார்க்-சிங்கப்பூர் விமானம்

1 mins read
e08bb966-0549-4234-9043-6268690111c6
படம்: எஸ்ஐஏ -

அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து சிங்கப்பூருக்கு வந்துகொண்டிருந்த சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் சென்னையில் திங்கட்கிழமை (மார்ச் 27) காலையில் தரையிறங்கியது.

கென்னடி என்ற அமெரிக்கப் பயணிக்குத் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதனையடுத்து, அவருக்கு விமானத்தில் முதலுதவி அளிக்கப்பட்டது.

அப்போது விமானம் ஆந்திர மாநிலத்திற்கு மேலே வான்வெளியில் பறந்துகொண்டிருந்தபோதும் மருத்துவ வசதிகளுக்காக விமானி அதனைச் சென்னையில் தரையிறக்க விரும்பினார்.

அதன்படி, விமானத்தைத் தரையிறக்க அனுமதி கேட்டு சென்னை விமான நிலையக் கட்டுப்பாட்டு அதிகாரிகளைத் தொடர்புகொண்டார். அந்த அதிகாரிகள், பொது விமானப் போக்குவரத்துத் தலைமை இயக்ககத்திடம் அவசரத் தரையிறக்கத்திற்கு அனுமதி பெற்று, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தனர்.

விமானம் தரையிறங்கியதும் தயாராக இருந்த சென்னை விமான நிலைய மருத்துவக் குழு, விமானத்தினுள் ஏறி திரு கென்னடியைப் பரிசோதித்தது. அவருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது தெரியவர, அவருக்கு மருத்துவமனை சிகிச்சை தேவை என அறிவுறுத்தப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திலுள்ள குடிநுழைவு அதிகாரிகள் திரு கென்னடிக்கு அவசரகால விசா வழங்கினர்.

பின்னர் அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்த விவரம் சென்னையிலுள்ள அமெரிக்கத் துணைத் தூதரகத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.

நான்கு மணி நேரத் தாமதத்திற்கு பின்னர் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானம் 317 பயணிகளுடன் மீண்டும் சிங்கப்பூருக்குக் கிளம்பிச் சென்றதாக 'தினத்தந்தி' செய்தி வெளியிட்டுள்ளது.

திரு கென்னடியின் உடல்நிலை சீராக இருக்கிறது என்றும் விரைவில் இருந்து மருத்துவமனையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்றும் சென்னை விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்தன.